
1811-ஆம் ஆண்டு, வெனிசுலா ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது, அதை அங்கீகரித்த முதல் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 1823-ல் அமெரிக்கா 'மன்ரோ கொள்கையை' அறிவித்தது. அதாவது, ஐரோப்பிய நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும், அப்படித் தலையிட்டால் அமெரிக்கா அதைத் தடுக்கும் என்றும் கூறியது. இது தொடக்கத்தில் வெனிசுலாவிற்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அமைந்தது. இப்படி இரு நாடுகளும் நட்பு நாடுகளாக விளங்க, 1920-களில் வெனிசுலாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், வெனிசுலா, அமெரிக்காவின் மிக முக்கியமான எண்ணெய் விநியோகஸ்தராக மாறியது.
இருமுகத்தை காட்டிய அமெரிக்கா...
அப்போதுதான் ஒரு புறம் நட்பு, மறுபுறம் எண்ணெய் வளத்தை கண்டு பொறாமை என இரு முகங்களை காட்டத் தொடங்கியது அமெரிக்கா. இது மட்டுமல்லாமல், கம்யூனிசம் பரவுவதைத் தடுக்க, வெனிசுலாவில் இருந்த பல வலதுசாரி சர்வாதிகாரிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. உதாரணமாக மார்கோஸ் பெரெஸ் ஜிமெனெஸ். இவர், தேர்ந்தெடுத்த அரசை வீழ்த்தி விட்டு, ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர்.
1954-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் (Eisenhower), ஜிமெனெஸிற்கு அமெரிக்காவின் உயரிய ராணுவ விருதான 'Legion of Merit' விருதை வழங்கிக் கௌரவித்தார். கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விருதா என கொதித்தனர் வெனிசுலா மக்கள். நீரு பூத்த நெருப்பு போல, இரு நாடுகளுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் 1999- ஆம் ஆண்டுதான் மிகப் பெரிய அளவில் வெடித்தது. 1999-ல் ஹியூகோ சாவேஸ் (Hugo Chávez) வெனிசுலாவின் அதிபரானார். அவர் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார். சாவேஸை பதவியிலிருந்து அகற்ற 2002-ஆம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்ற வெனிசுலா அதிபர்!
வெனிசுலாவின் அரசு எண்ணெய் நிறுவனத்தில் சாவேஸ் செய்த மாற்றங்களுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதைக் காரணம் காட்டி, ராணுவத்தின் ஒரு பிரிவினர் சாவேஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணுவம் பதவியில் அமர்த்திய பெட்ரோ கார்மோனாவை (Pedro Carmona) அமெரிக்கா உடனடியாக அங்கீகரித்தது. ஆனால் இந்த புரட்சி வெறும் 47 மணி நேரங்களில் தோல்வியில் முடிந்தது. சாவேஸ் மீண்டும் அதிபரானார். 2006-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை "சாத்தான்" என அழைத்தார். "நேற்று சாத்தான் இங்கு வந்திருந்தார். இப்போதும் அந்த இடம் கந்தக வாடை வீசுகிறது" என்று கூறினார்.
களத்துக்கு வந்த மதுரோ...
சாவேசின் மறைவுக்கு பின்னர், அவரது துணை அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ, தேர்தலில் வென்று அதிபராக பதவியேற்றார். மதுரோவின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கூறி, அமெரிக்கா வெனிசுலா நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதற்கு மத்தியில், 2018-ல் நடந்த தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகளும் அமெரிக்காவும் குற்றம் சாட்டின. எனவே, மதுரோவின் பதவியேற்பு செல்லாது என்றும், அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத் தலைவரே இடைக்கால அதிபராக வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தினர்.
மதுரோவுக்கு வந்த சிக்கல்...
2019- ஜனவரி 23-ல் ஜுவான் குவைடோ, தன்னை தானே 'இடைக்கால அதிபராக' அறிவித்துக்கொண்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே டிரம்ப், குவைடோவின் தலைமையை அங்கீகரித்தார். அமெரிக்காவில் இருந்த வெனிசுலாவின் சொத்துக்கள் மற்றும் எண்ணெய் வருமானத்தைக் கையாளும் அதிகாரத்தை குவைடோவிடம் வழங்கினார். டிரம்பின் பேச்சைக் கேட்டு கனடா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 60 நாடுகள் குவைடோவை அங்கீகரித்தன. குவைடோவிற்கு சர்வதேச ஆதரவு இருந்தாலும், வெனிசுலாவின் ராணுவம் மதுரோவிற்குத் தொடர்ந்து விசுவாசமாக இருந்தது. இதனால் மதுரோவே அதிபர் பதவியில் நீடித்தார்.
2025-ல் மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, இரு நாடுகளுக்குமான மோதல் அதிகரித்தது. டிரம்ப், மதுரோவை ஒரு நாட்டை ஆள்பவராகப் பார்க்காமல், 'கார்டெல் டி லாஸ் சோல்ஸ்' என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராகப் பார்க்கிறார். மதுரோவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சுமார் 415 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். வெனிசுலா வழியாக அமெரிக்காவிற்குள் கொக்கைன் கடத்தப்படுவதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
கடல் வழியாக போதைப்பொருள் கடத்துவதாகக் கூறி, கடந்த சில மாதங்களில் அமெரிக்கா 30-க்கும் மேற்பட்ட படகுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த தேர்தலிலும் மதுரோ முறைகேடு செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியதாக அமெரிக்கா கூறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எதிர்க்கட்சித் தலைவி மரியா கோரினா மச்சாடோவை, மதுரோ அரசு ஒடுக்குவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் அமெரிக்காவின் எதிரிகளான ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடன் மதுரோ நெருக்கமாக இருப்பதும் டிரம்ப் கண்ணை உறுத்துகிறது என்றும், அமெரிக்காவின் எல்லையிலேயே ரஷ்யாவின் செல்வாக்கு இருப்பதை அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது என்றும், அதனாலேயே இத்தகைய தீவிர நடவடிக்கைகள் என்றும் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments