
சட்ட ரீதியான அவசர தேவைகளுக்கு நள்ளிரவில் கூட உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை நாடலாம் என நாட்டின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், அவசர பிரிவு கொண்ட மருத்துவமனைகளைப் போன்று, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நாட்டின் குடிமகன் நள்ளிரவில் கைது செய்யப்பட நேர்ந்தால், சட்டரீதியான பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டலாம் என்றும் சூர்யகாந்த் கூறியுள்ளார்.
அலுவல் நேரங்களைக் கடந்தும், சட்டரீதியான அவசர தேவைகளுக்கு குடிமக்கள் நாடும் வகையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் சூர்யகாந்த் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், மத ரீதியான மனுக்கள், மகளிர் உரிமை சார்ந்த வழக்குகளை 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
வசதி படைத்தவர்கள் தொடர்புடைய வழக்குகளில் வழக்கறிஞர்கள் நீண்ட நாட்களுக்கு வாதாடுவது தடுக்கப்படும் என்று கூறிய சூர்யகாந்த், நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் நீதிமன்றங்களில் வாதாடும் நேரம் சம அளவில் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
எழுத்துப்பூர்வமான பதில்கள் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே அதனைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments