Ticker

6/recent/ticker-posts

14 வயதில் அதிகாரப் பீடம் ஏறும் 'பெக்டு ரத்த வழி' வாரிசு... நாட்டை ஆள்வதை தீர்மானிக்கும் ஒரு மலை - இது வடகொரியா சம்பவம்!


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளான 'கிம் ஜு-ஏ'வை தனது அதிகாரப்பூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தென் கொரிய உளவு அமைப்புகள் அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் உச்சபட்ச அதிகார மையமாகத் திகழும் கிம் ஜாங் உன், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டை ஆண்டு வருகிறார். தனது தந்தை கிம் ஜாங் இல்லின் மறைவுக்குப் பிறகு, 27 வயதிலேயே அதிபராக பொறுப்பேற்ற அவர், அணு ஆயுத பலம் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் வடகொரியாவை உலக நாடுகளுக்குச் சவாலாக மாற்றினார்.

அவரது உடல்நிலை பற்றி பல்வேறு யூகங்கள் எழுந்து வந்த நிலையில், வாரிசு குறித்த தகவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளார் கிம் ஜாங் உன். அவர், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்-னின் மகள் 'கிம் ஜு-ஏ'. இந்த தகவலை தென் கொரியாவின் உளவு அமைப்பான National Intelligence Service உறுதிப்படுத்தியுள்ளது. கிம் ஜாங் உன்-னின் மகள் 'கிம் ஜு-ஏ-வுக்கு தற்போது 14 வயது தான் ஆகிறது.

இந்த சிறிய வயதிலேயே அவரை அதிகாரப்பூர்வ வாரிசாக மாற்றப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிம் ஜாங் உன் தனது தந்தை இறந்த பிறகு ஓராண்டுக்குள் ஆட்சிக்கு வரவேண்டியிருந்தது. இது தொடக்கத்தில் அவருக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. தனது மகளுக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக, அவருக்கு இப்போதே ராணுவம் மற்றும் அரசியல் பயிற்சிகளை தர கிம் விரும்புவதாக கூறப்படுகிறது.

வடகொரியாவில் கிம் குடும்பத்தின் "பெக்டு ரத்த வழி" மட்டுமே நாட்டை ஆள முடியும் என்ற பிம்பம் உள்ளது. கொரியர்களின் கலாச்சாரத்தில் பெக்டு மலை என்பது மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. வடகொரிய வரலாற்றின்படி, அந்நாட்டை உருவாக்கிய கிம் இல் சுங், ஜப்பானியர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை பெக்டு மலையிலிருந்தே தொடங்கியதாக தகவல்கள் உள்ளன.

எனவே, இந்த மலையோடு தொடர்புடைய ரத்த வழி மட்டுமே நாட்டை ஆளும் தார்மீக உரிமையைக் கொண்டது என்பது அவர்களின் வாதம். வடகொரியா தலைவர்கள் வெறும் மனிதர்களாகப் பார்க்கப்படாமல், ஒருவித தெய்வீகப் பிறவிகளாக சித்தரிக்கப்படுகிறது. உதாரணமாக, இரண்டாம் தலைவரான கிம் ஜாங் இல் பிறந்தபோது, வானத்தில் இரண்டு வானவில்கள் தோன்றியதாகவும், ஒரு புதிய நட்சத்திரம் உதயமானதாகவும் வடகொரிய பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்படுகிறது.

இந்த புனிதமான கதைகள் மூலம், கிம் குடும்பத்தினர் மற்ற மனிதர்களை விட உயர்ந்தவர்கள் என்கிற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஜனநாயக நாடுகளில் மக்கள் ஓட்டுப் போட்டு தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் வடகொரியாவில், "பெக்டு ரத்த வழி" என்ற கோட்பாடு இருந்தால் மட்டுமே ஒருவர் தலைவராக முடியும். கடந்த சில மாதங்களாகவே, கிம் ஜாங் உன் தனது மகளை ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களுக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறார்.

ஆரம்பத்தில் ஒரு தந்தையின் பாசமாகப் பார்க்கப்பட்ட இந்த விஷயம், தற்போது வடகொரியாவின் அதிகார மாற்றத்திற்கான அறிகுறியாக மாறியுள்ளது. அரசு ஊடகங்கள் அவரை "அன்பிற்குரிய மகள்" என்று அழைப்பதை நிறுத்திவிட்டு "வழிகாட்டும் நபர்" என்று அழைக்கத் தொடங்கியுள்ளன. இது அந்த நாட்டின் உச்சகட்ட தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய அடைமொழியாகும்.

ஜு-ஏ இப்போது கள ஆய்வுகளின் போது சில அரசு கொள்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க தொடங்கியுள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், இப்போது ஜு-ஏ-வுக்குப் பின்னால் நின்று அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இது ஜு-ஏ-தான் அடுத்த வாரிசு என்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு (National Intelligence Service) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட பகிரங்க அறிக்கைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. வடகொரியா ஒரு அதீத ரகசிய நாடு என்பதால், அதன் தலைமைத்துவத் திட்டங்கள் குறித்த பல விவரங்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாது. புதிய தகவல்கள் வெளிவரும்போது, இந்தச் செய்தியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

news18


 


Post a Comment

0 Comments