Ticker

6/recent/ticker-posts

உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்க... காலை எழுந்தவுடன் நீங்கள் செய்யவே கூடாத 5 விஷயங்கள்!


நம் சிறுநீரகத்தை பாதிக்கும் 5 காலை பழக்கங்கள் குறித்துதான் இங்கே பார்க்கப்போகிறோம்...

பொதுவாக நம்மில் பலரும் காலை எழுந்தவுடன் என்ன செய்வோம்? பல் துலக்கிய கையோடு சுடச்சுட ஒரு கப் காபி குடிப்போம். பின் பரபரவென அலுவலகத்துக்கு கிளம்ப தொடங்கிவிடுவோம். இந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் செய்யும் சில விஷயங்கள், நம் உடலின் பல முக்கிய உறுப்புகளை பாதிக்கும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

அதிலும் சில பழக்கங்களால் குறிப்பாக நம் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடலை சமநிலைப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும் சிறுநீரகங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என்கின்றனர் நிபுணர்கள்.


சிறுநீரக பாதிப்பென்பது, நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு, பிற்காலத்தில் நீண்டகால பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அப்படி நாம் காலையில் செய்யும் ஐந்து முக்கியமான பழக்கங்கள், நம் சிறுநீரகத்தை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பது பற்றி மருத்துவர் வெங்கட சுப்ரமணியம் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவற்றை காணலாம்.

1) வெறும் வயிற்றில் காபி குடிப்பது: இரவு தூங்கி எழும்போது உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டிருக்கும். சிறுநீரகங்கள் அதிக நேரமாக தண்ணீரே இல்லாமல் உடலிலுள்ள கழிவுகளை வடிகட்டி கொண்டிருக்கும். அதுபோன்ற நேரத்தில் தண்ணீருக்கு பதிலாக முதலில் காபி அல்லது தேநீர் அருந்தினால், அதன் பணி மேலும் கடினமாகும். அதுவே காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நச்சுகளை வெளியேற்ற உதவும்.

2) காலை எழுந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் இருப்பது: வெகுநேரமாக (இரவு முழுவதும்) உடல் நச்சுக்களை வெளியேற்ற சிறுநீரகத்தை பயன்படுத்தியிருக்கும். காலை எழுந்தபிறகும் அதை வெளியேற்றாமல் வைத்திருப்பது, சிறுநீரகத்தின் சுமையை அதிகரிக்கும். குறிப்பாக சிறுநீரகம் அதிக நேரம் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும் என்பதால், நாள்பட்ட இந்தப் பழக்கம் சிறுநீரகக்கல் போன்ற பிரச்சனையை உருவாக்கும். இதனால்தான் எப்போதுமே சிறுநீர் கழிப்பதை தாமதப்படுத்தக்கூடாதென அறிவுறுத்தப்படுகிறது.

3) வலிநிவாரணிகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது: வலி நிவாரணி மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுக்காவிட்டால், அவை சிறுநீரகங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே கவனம் தேவை.

4) உடற்பயிற்சிக்குப் பின் தண்ணீர் குடிக்காமல் இருப்பது: காலையில் உடற்பயிற்சியோடு நாளை தொடங்குவது சிறந்த பழக்கம்தான். இருந்தாலும் அதன்பிறகு நாம் நம் உடலுக்கு என்ன செய்கிறோம், என்ன கொடுக்கிறோம் என்பது அவசியம். உடற்பயிற்சியின்போது நீரிழிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால், தண்ணீர் குடிப்பது அவசியம். இல்லாதபட்சத்தில் நீரிழிப்பால் சிறுநீரகம் பாதிக்கப்படக்கூடும்.

 5) காலை உணவை தவிர்ப்பது: காலை நேரத்தில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து மற்றும் ஆற்றல் கிடைக்காதபோது, உடலில் கழிவுகள் தேங்கி சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம். மட்டுமன்றி காலை சாப்பிடாமல் இருந்தால் பசி அதிகரித்து அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட / சர்க்கரை சேர்க்கப்பட்ட / பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடவும் இது தூண்டும். இதனால் சிறுநீரகம் மேலும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

பொறுப்புத் துறப்பு: 

இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

news18


 


Post a Comment

0 Comments