Ticker

6/recent/ticker-posts

"நல்லா சிரிச்சிட்டு போனாரு.. அரை மணி நேரத்துல இப்படி ஆகிடுச்சு.." சேலம் பரப்புரையில் உயிரிழந்த சுராஜியின் மனைவி வேதனை!


சேலத்தில் விஜய் பரப்புரையின்போது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் வருமானம் ஈட்டிய ஒரே நபர் உயிரிழந்ததால், அவரது மனைவி, குழந்தைகள் நிற்கதியாக பரிதவிக்கின்றனர்.

கரூர் துயரம் ஏற்படுத்திய வடு ஆறுவதற்குள், சேலத்தில் விஜய் பரப்புரையில் மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சீலநாயக்கன்பட்டியில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது, கடுமையான வெயில் காரணமாக நபர் ஒருவர் மயங்கி விழுந்தார். முதலுதவிக்கு பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 37 வயதான சுராஜி என்பதும், 25 ஆண்டுகளாக சேலத்தில் தங்கி வெள்ளி வேலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சுராஜி உடலை கண்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். நண்பரிடம் பாஸ் பெற்று கூட்டத்திற்கு சென்ற சுராஜி, கடும் வெயிலில் சுருண்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே இதய பிரச்னை இருந்ததாக கூறப்படும் நிலையில், அதனை உறவினர்கள் மறுத்தனர்.

மருத்துவமனையில் தவெகவினர் கூடியிருந்தபோது, அவர்கள் வாகனத்தை இடித்ததாகக் கூறி செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஆத்திரத்தில் கைகலப்பிலும் தவெகவினர் ஈடுபட்டதால், இருதரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். செய்தியாளர்களின் வாகனத்தில் ஏறியும் தவெக ஆதரவாளர்கள் அடாவடியில் ஈடுபட்டனர். இதனிடையே, தவெக பரப்புரை கூட்டத்தில் உயிரிழந்த சுராஜின் மனைவி, குழந்தைகள் இனி என்ன செய்வார்கள் என அக்கம்பக்கத்தினர் வேதனையோடு கூறினர். சேலம் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது வருத்தமளிப்பதாக தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்தார். இரவு நேரங்களில் கூட்டத்தை நடத்தினால் மக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் என்பதற்காகவே பகலில் கூட்டத்தை நடத்துவதாக நிர்மல்குமார் தெரிவித்தார்.

news18


 


Post a Comment

0 Comments