Ticker

6/recent/ticker-posts

என் அழகிய ஓவியமே!


சென்னையில் வசிக்கும் அருண் (Arun) ஒரு இளம் ஓவியர். அவனுக்கு இயற்கையை வரைவது மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு மாலையும் நகரின் பூங்காவுக்குச் சென்று அங்கு அமர்ந்து ஓவியம் வரைவது அவனது வழக்கம்.

ஒரு மழைக்கால மாலை, பூங்காவில் நடந்து வந்தாள் தியா .அவள் ஒரு பள்ளி ஆசிரியை. மழை தூரல் பெய்து கொண்டிருந்தது. மழையில் ஒரு சிறிய மரத்தடியில் நின்று துளியடித்த பூக்களைப் பார்த்து மகிழ்ந்த தியாவின் அழகில் மயங்கிய அருண், அந்தக் காட்சியை உடனே தன் கேன்வாஸில் வரையத் தொடங்கினான்.

அன்று முதல், அருண் தியாவைப் பார்க்க ஒவ்வொரு நாளும் பூங்காவுக்குச் செல்வான். ஆனால் அவளுடன் பேசத் தைரியம் இல்லை. மாறாக, அவளைச் சுற்றி நடக்கும் பறவைகள், அவள் சிரித்தபோது மலரும் முகம் என பல ஓவியங்களை மறைமுகமாக வரைந்தான்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள், அருண் பூங்காவில் தன் ஓவியங்களை வைத்து ஒரு சிறிய கண்காட்சி நடத்தினான். தியாவும் அந்தக் கண்காட்சிக்கு வந்தாள். அங்கு, ஒரு படத்தைப் பார்த்து அவள் ஆச்சரியத்துடன் நின்றாள். அது மழையில் நின்று பூக்களை பார்த்த தன்னைப் போன்றே வரைந்த ஓவியம்! அதற்குக் கீழே அருண் எழுதியிருந்தான்: "என் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தவள் "

தியா அருணிடம் சென்றாள். அவன் முன் நின்று, "இது எப்படிஎப்போது வரைந்தீர்கள்? நான் உங்களைப் பார்த்ததே இல்லையே?" என்று கேட்டாள்.

சிறிது பயத்துடன் அருண் கூறினான், "நான் உங்களை ஒரு மாதத்திற்கு முன்பு மழையில் பார்த்தேன். உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு புதிய ஓவியங்கள் பிறக்கின்றன. "மன்னிச்சுடுங்க ப்ளீஸ்.நான் எதுவும் தப்பான நோக்கத்தில் வரையவில்லை,அழகாய் இருந்தது அள்ளிக்கொண்டேன்" .என்றான் லேசான புன்னகையுடன்.

தியா புன்னகைத்தாள். "மன்னிப்பதற்கு என்ன உள்ளது? எவரும் என்னை இவ்வளவு அழகாக வரைந்ததில்லை,சந்தோஷமாயிருக்கு...தேங்க்ஸ் " என்றாள்.

அன்று முதல் அவர்களின் நட்பு தொடங்கியது. அருண் தியாவுக்கு ஓவியம் கற்றுக் கொடுத்தான். தியா அருணுக்கு நல்ல புத்தகங்களைப் படித்துக் காட்டினாள். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டனர்.

அருண் மனம் அவளுடைய காதலுக்காக ஏங்கியது.ஆனால் தப்பாக நினைத்து விடுவாளோ என்ற அச்சம் அவனை தடுத்தது.

தியாவுக்கும் அதே எண்ணங்கள் தோன்ற அவளும் சொல்வதற்கு தயங்கினாள்.

ஒரு நாள், தியாவிற்கு மற்றொரு நகரத்தில் வேலை கிடைத்தது. அவள் சென்னையை விட்டு வெளியேற வேண்டும். அருண் மனம் நொந்தான். தன் காதலைச் சொல்லாமல் அவளைப் போக விட முடியாது என்று முடிவு செய்தான்.

தியா ரயிலில் ஏறும் தருவாயில், அருண் அவளிடம் ஒரு பெரிய பேப்பர் ரோல் (Paper roll) கொடுத்தான். "ரயில் புறப்பட்ட பிறகு இதைத் திறக்கவும்" என்று கேட்டுக்கொண்டான்.

தியா ரயில் புறப்பட்ட பிறகு, அந்த ரோலைத் திறந்தாள்.

அதில் அருண் வரைந்திருந்தது - அவர்கள் இருவரும் ஒரே பூங்காவில் அமர்ந்து சிரித்துப் பேசுவது போன்ற அழகான ஓவியம். அதன் அடியில் இவ்வாறு எழுதியிருந்தான்:

"நீ என் ஓவியத்தின் வண்ணம் இல்லை, என் வாழ்க்கையின் வண்ணம். நான் உன்னை காதலிக்கிறேன் தியா. உன் வெற்றிக்கு என் ஆசிகள், ஆனால் என் இதயம் உன்னுடன் தான்.காத்திருப்பேன் தினமும் .வந்துவிடு விரைவில்"என கவிதை வரிகளில் எழுதியிருந்தான்.

தியாவின் கண்களில் நீர் வடிந்தது. அவள் உடனே அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி, ஓடி வந்தாள். அருண் இன்னும் ரயில் நிலையத்திலேயே நின்றிருந்தான், அவள் திரும்பி வருவாளா என்று எதிர்பார்த்து.

தியா அருணை பார்த்தவுடன் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள். "நான் வேலையை ஏற்க மாட்டேன். என் வாழ்க்கையின் வண்ணம் இங்கே இருக்கும்போது, நான் எங்கே செல்ல முடியும்?" என்றாள்.

அருணின் முகம் மலர்ந்தது. மழை தூரல் பெய்த அன்றைய தினம் போல, அவர்களின் காதலும் நிரந்தரமானது.

மாஸ்டர் 

 


Post a Comment

0 Comments