Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் 'ஸ்ட்ராபெரி பழங்களின் கேப்பிடல்' எது தெரியுமா?


பொதுவாக நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் அளித்து ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் பழங்களின் வரிசையில் பெரி வகைப் பழங்களுக்கும் இடமுண்டு. அதில், ஸ்ட்ராபெரி பழங்களில் உள்ள வைட்டமின் C நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆந்தோஸியானின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்து, இதய ஆரோக்கியம் காக்கவும் சிறந்த முறையில் உதவிபுரிகின்றன.

பிரிட்டிஷ் அரசால், 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஸ்ட்ராபெரி பழங்களின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள மஹாபலேஸ்வர் என்ற ஊரில் இதன் விவசாயம் ஆரம்பமானது. பின் அப்பகுதியில் உள்ள பன்ச்கனி (Panchgani) என்ற இடம் ஸ்ட்ராபெரி பழங்களின் செழிப்பான வளர்ச்சிக்கு உகந்ததாகி, உற்பத்தியில் முன்னிலை வகிக்கலானது.

மஹாபலேஸ்வருக்கு ஸ்ட்ராபெரியுடனான தொடர்பு இயற்கையாக உண்டானது. மிதமான வானிலை, சுத்தமான காற்று, வளம் நிறைந்த செம்மண் தரை போன்றவை ஸ்ட்ராபெரி செடியை இடைவெளியின்றி வளர்த்து வர விவசாயிகளுக்கு உதவின. இப் பழங்களின், கண்ணைக் கவரும் சிவந்த நிறமும் அதன் வெளிப் புறத்தில் மின்னும் தங்க நிற விதைகளும், பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களும் மக்கள் அனைவராலும் விரும்பப்பட்டன.

மகாராஷ்டிரா மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் இங்கு வந்து குவிய ஆரம்பித்தனர். ஃபிரஷ் ஸ்ட்ராபெரி பழங்களை விற்று வரும் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. நாளடைவில் மஹாபலேஸ்வருக்கு வந்து ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கிச் செல்வது ஒரு பாரம்பரிய வழக்கமாக மாறியது.

மஹாபலேஸ்வர் பிரபலமடையத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்தி பழங்களின் இனிப்பு சுவையும் தரமும் குறையாமல் பார்த்துக் கொண்டனர். அரசு தன் தரப்பிலிருந்து மரியாதை தரும் விதமாக ஸ்ட்ராபெரிக்கு GI tag வழங்கி கௌரவித்தது. இந்தியாவில் 'ஸ்ட்ராபெரி பழங்களின் கேப்பிடல்' என்ற பெயரும் மஹாபலேஸ்வர் டவுனுக்கு கிடைத்தது.

இம்மாநிலத்தில் அநேக பால் உற்பத்திப் பண்ணைகளும் அருகருகே உள்ளதால், ஸ்ட்ராபெரி சேர்த்து யோகர்ட், மில்க் ஷேக், ஐஸ் கிரீம், ஸ்மூத்தி, சீஸ் கேக், கிரீம் சீஸ், ஓட் மீல் போன்ற பலவகை உணவுகள் தயாரித்து விற்பதும் சுலபமாக உள்ளது. இங்கு ஒரே மாதிரியான குளிர்ந்த சீதோஷ்ண நிலை வருடம் முழுவதும் நிலவுவதால் ஸ்ட்ராபெரி உற்பத்தியும், குன்றாத சுவையுடன் எப்பொழுதும் கிடைக்கிறது.

மஹாபலேஸ்வர் டவுனிலிருந்து பன்ச்கனி செல்ல பசுமை நிறைந்த சாலை வசதி உள்ளது. சுற்றுலா பயணிகள் அங்கங்கே வாகனத்தை நிறுத்தி ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் அருந்தவும், ஸ்ட்ராபெரி ஜாம் வாங்கிக்கொள்ளவும் முடியும். அதற்கும் மேல், விவசாயிகள், செடியிலிருந்து நாமே பழங்களைப் பறித்து அங்கேயே உண்ணவும் வாய்ப்பு அளிப்பர் என்பது கூடுதல் கவர்ச்சி.

kalkionline


 


Post a Comment

0 Comments