Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-103


நடனத்தை அவனது கண்கள் ரசித்துக் கொண்டிருந் தாலும், குள்ளர்களின் நாணயத் தாள்கள் அவனது கண்முன் தோன்றி, அவனது  சிந்தனையை இறக்கை கட்டிப் பறக்கச் செய்து கொண்டிருந்தது. குகைக்குள் செரோக்கி பத்திரப்படுத்தி வைத்திருந்த புராதன நூலிலிருந்து கலட்டி எடுக்கப்பட்டிருந்த நான்கு பக்கங்கள் கொண்ட இரண்டு தாள்களிலிருந்த விடயம் ஒன்றிற்காக அந்தக் குள்ளர்கள் பெறுமதியான நாணயத்தாள்களை அள்ளிக்கொடுத்துச் சென்றுள்ளார்கள்! 

அந்தக் குள்ளர்கள் யார்? நூலிலிருந்து அவர்கள் கலட்டி 
எடுத்துச் சென்றுள்ள விடயத்திலிருந்து அவர்கள் என்னதான் பண்ணப் போகின்றார்கள்?

கேள்விகளுக்கு மேல் கேள்விகள் இர்வினின் மூளையை அரித்துக்  கொண்டே இருந்தன. 

அப்பொழுதுதான் வனவாசிகள் தமது உச்சந்தொட்ட வனத்துப்படல்களையும் நடனங்களையும் நிறுத்திவிட்டுக் கிராமம் நோக்கிய பயணத்திற்குத் தயாராகினர்!

நிலாவொளியில் ஆற்றங்கரைப்பகுதி காணப்பட்டபோதிலும், வனப்பகுதிக்குள் ஒளி ஊடறுக்க முடியாதவாறு  நெருக்கமாக நீண்டு வளர்ந்திருந்த மரங்கள் காணப்பட்டன. நடந்து செல்லும் பாதைக்கு ஒளி வழங்க 'நெருப்புப் பந்தனம்' ஏந்திய ஒருவர், பாதையின் இரு மருங்கிலும் காய்ந்திருந்த பண்புற்களுக்கு நெருப்பு மூட்டியவராக நடந்தார்.

“ஒரினொகோ”விலிருந்து விடை பெற்றுக் கொண்ட மற்றவர்கள், தங்களின் தலைகளில் பொதிகளைச் சுமந்தவர்களாக அணிதிரண்டு, அமேசான் வனத்தை ஊடறுத்துத் தமது கிராமம் நோக்கிய ஒற்றையடிப் பாதையில் வீராப்புடன் நடக்கலாயினர்.

அவர்களைத் தொடர்ந்தவர்களாக செரோக்கியும், ரெங்க்மாவும் இர்வினை அரவணைத்தபடி மெதுவாக நடந்து கொண்டிருக்க, இறுதியாக செரோக்கியின் பெற்றோரும் அவர்களைத் தொடர்ந்து ரெங்க்மாவின் பெற்றோரும் நடந்தனர்.

ரெங்க்மாவின் தந்தை தான் சுமந்து வந்த வில்லுக்கு 
வேலைவராதா என்று மனதிற்குள் நினைத்தவராக, சுற்று முற்றும் தன் கவனத்தைச் சிதறவிட்டுக் கொண்டே  நடந்து கொண்டிருந்தார். 

சிறிது தூரம் செல்ல அவர்களது நடையில் தளர்வு ஏற்படத் தொடங்கியது! வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மிருகங்களின் நடமாட்டமில்லாத – வசதியாக அமர்ந்து கொள்ளக் கூடிய இடம் கிடைக்கின்ற போதெல்லாம்  அவர்கள் இளைப்பாறினர்.

அப்போதெல்லாம் தாம் சுமந்து வந்த கானகத்துப் பழங்களை அவர்கள் ருசித்துப் புசித்துப்  பசியாறிக்கொண்டனர்.

அமோசோனாஸ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட  இர்வின், தனது  முதுநிலை மேற்படிப்பிற்கான ஆய்வுக்காக  அமேசான் வாழ் பழங்குடிகள் பற்றிய கருப்பொருளைத் தேர்ந்தெடுத்திருந்த படியால், கிராமங்களை  அண்டிய பகுதிகளுக்கு செரோக்கி-ரெங்க்மாவுடன் சென்று வந்துள்ளபோதிலும், தனது வாழ்க்கையில் அமேசான் வனத்தை ஊடறுத்துச் செல்லும் “ஒரினொகோ” வரை சென்று வருவது  இதுவே முதல் தடவையாகும்!

இதனை அவன் ஒரு புது அனுபவமாகக் காண்கின்றபோதிலும், அவனுக்குள்ளே  ஓர் இனம்புரியாத பயமொன்று கூட  ஊசலாடிக் கொண்டுதானிருந்தது! 

அப்போதுதான் “கொர்ர்ர்....” என்ற கர்சனையோடு சற்றுத் தூரத்தில் ஒரு மிருகம் தரையில் வீழ்வதை அவன் கண்டான்!

(தொடரும்)


 


Post a Comment

0 Comments