
ஒரு காலத்தில் ஈராக் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தது. வளைகுடா நாடுகளிலேயே அதன் ராணுவம் மிக பிரம்மாண்டமானது. ஈராக் தனது எண்ணெய் வளங்களை 70களிலேயே தேசிய மயமாக்கியிருந்தது
மனித வரலாறு என்பதே முரண்பாடும், மோதலும் நிறைந்த ஒரு துன்பியல் நாடகமாக நகர்ந்து செல்வதாக மேற்கத்திய தத்துவவியலாளர் எகல் கூறுவார். வரலாறு என்பதே ஒரு இயக்கம் தான். அந்த இயக்கத்தில் அடிப்படையாக இருப்பது முரண்பாடுகள் என்றும் சொல்வார். தற்போதைய, ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் நடத்தும் போர் எகலின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது. (படம்: எகல்- ஜெர்மானிய சிந்தனையாளர்)
2003ல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கு அமெரிக்க இரண்டு முக்கிய காரணங்களை தெரிவித்தது. ஒன்று, ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் நாசக்கார பேரழிவு ஆயுதங்களை சேகரித்து வைத்துள்ளார். மற்றொன்று, மேற்கத்திய சமூகங்களை அசச்சுறுத்தும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஈராக் அரசுக்கு நெருங்கிய தொடர்புகள் உன்டு. போர் முடிந்து 2 சகாப்தங்கள் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு காரணங்களும் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், அந்நாட்டின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா மறைமுகமாக தனதாக்கி கொண்டுள்ளது.
ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலை ஈரான் ஆதரித்தது. காரணம் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான பகை. ஈரான் ஷியாக்களின் நாடு. ஈராக்கில் ஷியாக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் இரண்டாம் தர குடிமக்களாகவே நசுக்கப்பட்டனர். அதிகார மையநீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். சமூக, பொருளாதார அரசியலில் சன்னி அரேபியர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆட்சி அதிகாரம் முழுவதுமாக சன்னி அரேபியர்களிடம் இருந்தது. சன்னி இஸ்லாமை சேர்ந்த சதாம் உசேனும், பாத் கட்சியும் இந்த அதிகார ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்தின. இதுவே, ஈரானுக்கும்- ஈராக்கிற்கும் நிரந்தர மோதலை உருவாக்கியது.
ஒரு காலத்தில் ஈராக் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தது. வளைகுடா நாடுகளிலேயே அதன் ராணுவம் மிக பிரம்மாண்டமானது. ஈராக் தனது எண்ணெய் வளங்களை 70களிலேயே தேசிய மயமாக்கியிருந்தது. அதன் பொருளாதாரமே எண்ணெய் விற்று கிடைக்கும் வருவாய் தான். ஈராக் தினாரின் மதிப்பு அமெரிக்க டாலரை விட அதிகமாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
1979ம் ஆண்டு ஜனாதிபதியாக வந்த சதாம் எண்ணெய் விற்று வந்த காசை தொழில்துறைக்கு முதலீடு செய்தார். இருப்பினும், 1980ல் ஈரான் மீதான போரும், 1990ல் குவைத் மீதான போரும் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
குறிப்பாக, குவைத் யுத்தத்தை நினைவுபடுத்தி பார்க்கலாம். இதில் தோல்வியுற்ற பின்புதான் ஈராக் நொடிந்து போனது. பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. நாட்டு மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டனர். ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நாடு பலவீனப்பட்டது. இந்த சூழலில் தான் மீண்டும் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு படைகள் சதாம் உசேன் அப்புறப்படுத்த போர் தொடுத்தது. ஈரான் உற்சாகமானது.
ஈராக் படையெடுப்புக்கு பிறகு அமெரிக்கா தலைமையிலான இடைக்காலக் கூட்டணி அரசு, நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஈராக் மேம்பாட்டு நிதியத்தை (Development Fund for Iraq) அறிமுகப்படுத்தியது. இந்த நிதியானது நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஈரான் அரசு எண்ணெய் விற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்த காசை ஐ.நா கண்காணிப்பின் கீழ் நியூயார்க் ரிசர்வ் வங்கியில் மட்டுமே டெபாசிட் செய்யப்படுகிறது.
போர் சூழலில் ஒரு தற்காலிக ஏற்பாடாக உருவாக்கப்பட்ட இந்த வசதி இன்று வரை நீடித்து வருகிறது. அதாவது, எண்ணெய் வளங்களை விற்பதம் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு காசும் நேரடியாக அந்த வங்கிக்குத்தான் செல்கிறது. அங்கிருந்துதான் ஈராக் தன் நாட்டுத் தேவைகளுக்குப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஈராக்கின் 90% ஆண்டு வருவாய் எண்ணெயில் தான் உள்ளது. இந்த நிதி கட்டமைப்பை அமெரிக்கா தனது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. உதாரணமாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என பாக்தாத் வலியுறுத்திய போது, இந்த நிதிக்கான அணுகலைத் துண்டிப்பதாக வாஷிங்டன் எச்சரித்தது.
சரி, 2026க்கு வருவோம். தற்போது. ஈரானின் முக்கிய எண்ணெய் மையமாக விளங்கும் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா முனைந்து வருவதாக தெரிகிறது. இந்த மோதல் போக்கு காரணமாக ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளது. தற்போதைய போர், கச்சா எண்ணெய் பொருளாதார கட்டமைப்பில் இருந்து ஈரானை ஒதுக்கி தள்ளி உருவாக்கியுள்ளது. ஈரான் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவது, அல்லது முற்றிலுமாக ஒழிப்பது, எண்ணெய் பொருளாதார வரைபடத்தில் இருந்து ஈரானை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments