
உலக அமைதிக்கே நான் தான் காரணம் என தொடர்ந்து சொல்லி வருகிறார், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். பல நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை வர்த்தக திட்டங்களின் மூலம் தீர்த்து வைத்ததாக டிரம்ப் பலமுறை கூறியிருக்கிறார்.
கடந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தையும் டொனால்ட் டிரம்ப் தான் அறிவித்தார். மேலும், தனது பேச்சுவார்த்தையால் இரு நாடுகளுக்கு இடையே சமரசத்தை எட்டியதாக அறிவித்தார். இத்துடன் மொத்தம் 8 போர்களை நிறுத்தி உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
3.5 கோடி பேர் உயிரிழந்திருப்பார்கள்...
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தான் தலையிடாமல் இருந்திருந்தால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சுமார் 3.5 கோடி மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என தன்னிடம் கூறியதாக டிரம்ப் பேசி உள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க நாாடளுமன்ற கூட்டு தொடரில் டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையில், "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம். எனது ஆட்சியின் கடந்த 10 மாதங்களில், நான் எட்டு போர்களை முடிவுக்கு கொண்டுவந்தேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடந்திருக்கும். எனது தலையீடு மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார்.
9வது போரை நிறுத்த முயற்சி
9வது போரை முடிவுக்கு கொண்டுவர கடினமாக உழைக்கிறேன். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் கொடூர படுகொலை நடக்கிறது. நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போரே வெடித்திருக்காது. நான் எப்போதும் எனக்கு நாடாளுமன்றத்தின் Medal Of Honour விருதை விரும்பினேன். ஆனால் அதை நானே எனக்கு கொடுத்துக்கொள்ள அனுமதியில்லை என சொன்னார்கள்" என்று பேசினார்.
80 முறைக்கு மேல் சொன்ன டிரம்ப்
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பல பயங்கரவாத முகாம்களை கடந்தாண்டு மே 7ஆம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தொழித்தது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவியது.
இந்தச் சூழலில், இரு நாட்டுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதாக மே 10ஆம் தேதி அன்று முதன்முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதன் பின்னரே, இரு நாட்டு தரப்பிலும் உறுதிசெய்யப்பட்டது. அப்போது இருந்து சுமார் 80 முறைக்கும் மேல், தன்னால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது என டிரம்ப் சொல்லியிருக்கிறார்.
இந்தியா சொல்வது என்ன?
மோதலை நிறுத்தாவிட்டால் இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டுக்கும் 200 சதவீதம் வரி போட்டுவிடுவதாக எச்சரித்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், இந்த மோதலில் மூன்றாம் தரப்பின் தலையீடு ஏதும் இல்லை என கூறி, டிரம்ப்பின் வாதத்தை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இருநாட்டு ராணுவ இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னரே, பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக இந்தியா தொடர்ந்து கூறி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments