Ticker

6/recent/ticker-posts

போர் நிறுத்தத்துக்கான ஈரானின் இறுதி முடிவு!


மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும்  இஸ்ரேலிய கூட்டுப் படைகள் தொடுத்த  போர் பத்தாவது நாளையும் தாண்டியுள்ள நிலையில், உலக நாடுகளை அதிரவைக்கும் வகையிலான ஒரு பதிவை ஈரானிய ஜனாதிபதி மஸூத் பெஷேஷ்கியன் தனது சமூக ஊடகத்தளமான எக்ஸ்ஸில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் விடுத்த எச்சரிக்கைகளையும், சமாதானம் தொடர்பான சமிக்ஞைகளையும்  ஈரான் முற்றாக நிராகரித்துவிடவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தற்போது போர் முனையில் காட்டிவரும் வேகம், அவற்றின் பின்னாலிருக்கும் பிரம்மாண்டமான செலவுகள் மற்றும் முரண்பாடுகளைப் பார்க்கும்போது, இது ஒரு திட்டமிட்ட நகர்வா அல்லது வரலாற்றுத் தவறா என்ற கேள்வி எழுகின்றது!

அரசியல் களத்தில் "விவேகம்" என்பது சில நேரங்களில் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாக மாறிவிடுகின்றது. ஓரிரு ஆண்டுகளில் தானாகவே உலகைவிட்டும் விடைபெறப்போகும் ஈரானிய சுப்ரீம் லீடர் ஆயதுல்லாஹ் கொமைனியை அகற்ற பல பில்லியன் டாலர்களைக் கொட்டியமை அமெரிக்காவின் 'அசாத்திய விவேகம்' என்றுதான் குறிப்பிட வேண்டும்.

இதுவரை அமெரிக்கா நடாத்தி வந்துள்ள போர்களை ஈரான் இரண்டு தசாப்தங்களாக ஆய்வு செய்து, தனது தலைநகரே குண்டுவீசித் தகர்க்கப்பட்டாலும் தொடர்ந்து போரிடும் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளதாக ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி ஒருமுறை குறிப்பிட்டார்.

இது ஈரானின் இராணுவக் கோட்பாட்டின் ஆணிவேர்; பரவலாக்கப்பட்ட 'மொசைக் பாதுகாப்பு' (Decentralised Mosaic Defence) என்பதாகும். 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் ஈரான் தனது மூத்த தளபதிகள், முக்கிய போர் வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை இழந்தாலும், நாடு தொடர்ந்து போரிட வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

தலைமைத்துவப் படுகொலைகள் மூலம் ஒரு நாட்டை முடக்க நினைக்கும் எதிரிகளுக்கு இந்தக் கோட்பாடு மிகப்பெரியதொரு சவாலாகும்.

ஈரான் தனது நாட்டில் நிர்வாகத்திலுள்ள ஒவ்வொரு முக்கிய அதிகாரிக்கும் குறைந்தது நான்கு மாற்று நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கும். அதனால், ஈரானின் வியூகம் என்பது ஒரு சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ முடிந்துவிடும் போருக்கானதல்ல; பல ஆண்டுகள் நீடிக்கும், மிகுந்த உயிர்ச்சேதத்தையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும் ஒரு நீண்ட காலப் போராட்டத்திற்கானத் தயார் நிலையாகும்.

தலைவர்கள் கொல்லப்படலாம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படலாம், ஆனால் ஈரான் என்ற அமைப்பு தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் வகையில் இந்த "மொசைக் பாதுகாப்பு" வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், எவ்வித உறுப்படியான நோக்கமும் இல்லாமல் அமெரிக்கா- இஸ்ரேல் தொடுத்த இந்தப்போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின், தற்போது மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் விதிக்கின்றது.

சமூக ஊடகத் தளமான எக்ஸ்ஸில் ஈரானிய ஜனாதிபதி, ஈரானின் "சட்டபூர்வமான உரிமைகள்" அங்கீகரிக்கப்பட்டு, சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க வலுவான சர்வதேச உத்தரவாதங்கள் வழங்கப்பட்டால் மட்டுமே மோதல் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தீர்மானமும் ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும், நாடு எதிர்கால தாக்குதல்களை எதிர்கொள்ளாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஈரானிய ஜனாதிபதி மஸூத் பெஷேஷ்கியன் மேலும் குறிப்பட்டுள்ளார்.
சமூக ஊடகத் தளமான எக்ஸ் பதிவில், போரின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும் பெஷேஷ்கியன் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களுடன் பேசியதாகக் குறிப்பிடும் அவர், "பிராந்தியத்தில் அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகன்றேன். சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவால் தூண்டப்பட்ட இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பது, இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள்தான்" என்றும்  அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான இராணுவ நடவடிக்கைகள் ஈரானின் இராணுவ கட்டமைப்புகளைத் தாக்கியுள்ள நிலையில், ஈரானியப் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.

புலனாய்வு ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக மேற்கொண்ட இந்தப் போரினால், ஈரான் தற்போது தனது தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுமன்றி, ஒன்பது மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விரிவுபடுத்தி அந்நாடுகளிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் தாக்கி வருகின்றது.

நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானிக்கின்றபோது, அமெரிக்காவின் பொறுமையையும் வலிமையையும் சோதித்து, அவர்களை சோர்வடையச் செய்வது ஈரானின் எதிர்காலத் திட்டமாக இருக்கப் போகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது!

செம்மைத்துளியான்

 


Post a Comment

0 Comments