Ticker

6/recent/ticker-posts

ஏர் கனடா விமான விபத்து : தரைக்கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையையும் மீறி மோதிய விமானம்..!


உலகெங்கும் விமான விபத்துகள் தற்போது அதிகமாகி வரும் நிலையில் (மார்ச் 23, 2026) அதிகாலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express) விமானம், ஓடுபாதையில் தரையிறங்கியபோது அங்கு நின்றிருந்த 'ட்ரக் 1' என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள விபத்து குறித்தான வீடியோக்களில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதத்துடன் சிதைந்த நிலையில் உள்ளது தெரிகிறது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டலாம் என்றும், அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சில செய்திகள் கூறுகிறது. மேலும் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதமாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் மோசமான வானிலை நிலவியதே விபத்துக்கான காரணம் என்கிறது முதல் தகவல். விமானி மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு இடையேயான உரையாடலில், இரு தரப்பையும் நிறுத்துமாறு எச்சரிக்கப்பட்டும் இந்த மோதல் தவிர்க்க முடியாமல் போனதாகவும் அங்கிருந்து செய்திகளில் பெறப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது பற்றிய விரிவான விசாரணையை அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் (FAA) தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

kalkionline


 


Post a Comment

0 Comments