Ticker

6/recent/ticker-posts

ரூ.1.50 கோடி காரை மண்ணில் புதைத்த குடும்பத்தினர்! ஏன் தெரியுமா?


சீனாவில் உயிரிழந்த முதியவர் ஒருவரின் இறுதி சடங்கின்போது, அவர் பயன்படுத்திய சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு மெர்சிடிஸ் பென்ஸ் காரையும் அவருடன் சேர்த்து அவரது குடும்பத்தினர் மண்ணில் புதைத்த சம்பவம் இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடம்பரமான மற்றும் விசித்திரமான இறுதி சடங்கிற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணையில் இறங்கியுள்ளனர். 

சம்பவத்தின் பின்னணி

சீனாவின் வடகிழக்கு பகுதியான லியோனிங் மாகாணத்தில் உள்ள ஜின் குடும்பத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவர் தனது வாழ்நாளில் விதவிதமான சொகுசு கார்களை வாங்கி சேகரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அவரது இந்த அதீத கார் காதலை நினைவுகூரும் வகையிலும், இறந்த பிறகு அவர் செல்லும் உலகத்திலும் இந்த ஆடம்பரமான வாழ்க்கை தொடர வேண்டும் என்ற பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையிலும், அவரது குழந்தைகள் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர். அதன்படி, முதியவர் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் S450L என்ற விலையுயர்ந்த சொகுசு காரை அவருடனேயே சேர்த்து புதைக்க முடிவு செய்தனர். இந்த காரின் தற்போதைய மதிப்பு சுமார் 1.1 மில்லியன் யுவான் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1.49 கோடி ஆகும். மேலும், இந்த காரில் பொருத்தப்பட்டிருந்த 8888 என்ற பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் சீன கலாச்சாரத்தில் மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த நம்பர் பிளேட்டின் மதிப்பு மட்டும் சுமார் 1 லட்சம் யுவான் ரூ. 13.6 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி சடங்கும், புதைக்கப்பட்ட காரும்

இறுதி சடங்கு நடைபெற்ற ஏப்ரல் 9ம் தேதியன்று, அந்த ஜெர்மன் சொகுசு காரின் மீது சிவப்பு நிறத் துணி போர்த்தப்பட்டு, பக்கவாட்டு கண்ணாடிகளில் சிவப்பு நிற ரிப்பன்கள் கட்டப்பட்டிருந்தன. பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட ஒரு பெரிய குழியில் அந்த கார் மெதுவாக இறக்கப்பட்டு மண்ணால் மூடப்பட்டது. இந்த சடங்கில் உதவி செய்த கிராம மக்களுக்கு, முதியவரின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் 500 யுவான் சுமார் ரூ. 6,800 அடங்கிய சிவப்பு நிற உறைகளை பரிசாக வழங்கியுள்ளனர். காரை மண்ணில் புதைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சில மணி நேரத்திலேயே 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது. 

சமூக வலைத்தளங்களில் வெடித்த சர்ச்சை

இந்த சம்பவம் இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரின் இந்த செயலை ஒரு சிலர், "இறந்தவர் மீதான பாசத்தின் வெளிப்பாடு மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு" என நியாயப்படுத்தினர். ஆனால், பெருமளவிலான இணையவாசிகள் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். "இது முட்டாள்தனத்தின் உச்சம். இறந்த பிறகு வாழப்போகும் உலகத்தை பற்றி சிந்திக்கும் இவர்கள், தாங்கள் வாழும் இந்த உலகத்தில் காரை புதைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை பற்றி சிந்திக்கவில்லை," என்று ஒரு பயனர் காட்டமாக கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனர், "உயிருடன் இருக்கும்போது அவர்கள் மீது பாசத்தை காட்டுவதுதான் உண்மையான அன்பே தவிர, இறந்த பிறகு செய்யும் இதுபோன்ற ஆடம்பரமான சடங்குகள் வெறும் பணத்திமிரை காட்டுவதற்கான செயலே," என்று விமர்சித்துள்ளார். 

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமானதை தொடர்ந்து, உள்ளூர் சிவில் விவகாரங்கள் துறை உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. காரை உயிரிழந்தவருடன் புதைத்தது சட்டவிரோதமானது என்றும், இது பழமைவாத மூடநம்பிக்கை என்றும் கூறி ஜின் குடும்பத்தினரை கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், முறையாக பதிவு ரத்து செய்யப்படாமல் காரை புதைத்தது சட்டப்படி குற்றமாகும் என்றும், போலியான நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். 

அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, ஜின் குடும்பத்தினர் தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு பெரிய அளவிலான அபராதம் விதிக்கப்படலாம் என்றும், புதைக்கப்பட்ட காரை தோண்டி எடுத்து, அந்த இடத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகளுக்கான முழு செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடம்பரமாக செய்யப்பட்ட இந்த இறுதி மரியாதை, தற்போது அந்த குடும்பத்தினருக்கே மிகப்பெரிய சட்ட சிக்கலையும் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.

zeenews


 


Post a Comment

0 Comments