Ticker

6/recent/ticker-posts

மக்களை சென்றடையும் இலங்கையின் பொருளாதார வெற்றிகள்…


கடந்த ஆட்சிக் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்குண்டு வற்றிப்போயிருந்த இலங்கையின் திறைசேரி, தற்போது வளம்பெற்று மீள்நிலை நோக்கி நகர்ந்து வருவது யாவரும் அறிந்ததே. அரசின் வருவாய் அதிகரித்து, நிதி நிலைமை மேம்பட்டு வருவதை எதிர்க்கட்சி தரப்பினரும் கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசின் நிதி வருவாய் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மேம்பட்டுள்ளதாகவும் வரி வசூல் மற்றும் மொத்த நிதி மேலாண்மை துறைகள் முன்னேற்றம் காணப்படுவதாகவும் சபையில் தெரிவித்திருந்தார்.

டித்வா பேரனர்த்தம் மற்றும் உலகளாவிய யுத்த நெருக்கடி இலங்கையை ஆட்டிப்படைத்த போதிலும், திசைகாட்டி அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட நிதி முகாமைத்துவமும் மக்கள் நலனை மையப்படுத்திய கொள்கைகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் நிலைமையை ஓரளவிற்கு சமாளிக்க முடிந்தன.

ஊழல் மோசடியற்ற, வீண்விரயமற்ற, அதிகார துஷ்பிரயோகமற்ற, நாட்டு மக்கள் மீது உண்மையாக அன்புகொண்டுள்ள அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி மிளிர்வதால் பொருளாதார நெருக்கடியில் திணறிக்கொண்டிருந்த நம் நாட்டில் மெதுமெதுவாக செல்வம் கொழிக்க ஆரம்பித்திருக்கிறது. இச்செல்வம் ஜனாதிபதிக்கோ, பிரத மந்திரிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சொந்தமானது கிடையாது. இது மக்களின் உழைப்பில் சிறுகசிறுக சேர்ந்ததாகும். ஆனால், கடந்த காலத்தில் மக்களின் இச்சொத்து அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளின் உடைமையாக மாற்றப்பட்டிருந்தது. அச்சொத்தில் ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆனால், புதிய ஆட்சியில் மக்களின் சொத்து மக்களுக்கே உரித்தாக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் அழகான வாழ்க்கைக்காக அச்சொத்து ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் பதிவாகும் சிறிய பொருளாதார வளர்ச்சியும் தற்போது நேரடியாக மக்களிடமே சென்றடையும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசதுறை, தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள திருத்தங்கள் மூலம் வருமான நிலை மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகள், தற்காலிக தங்குமிடம் மற்றும் நிரந்தர குடியிருப்பு வசதிகள் வழங்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், சமூக பாதுகாப்பு வலையமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடி நிதி உதவிகள் மற்றும் வாழ்வாதார ஆதரவு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

விவசாயத் துறையில் உர மானியங்கள், பயிர் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சந்தை அணுகல் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் துறையில் உபகரண உதவிகள் மற்றும் குளிர்சாதன வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து துறையில் புதிய பேருந்து சேவைகள், சாலை அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கல்வி மற்றும் சுகாதார துறைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலம், பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி கூறியது போலவே, இலங்கையை வளமான நாடாகவும் மக்களின் வாழ்க்கையை அழகானதாக மாற்றவும் இதயசுத்தியுடன் செயற்பட்டு வருகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரம்சார் அறிக்கைகளின் தரவுகள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 32,751 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2,655 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். அதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5.0% ஆக பதிவாகியிருக்கிறது.

2019 ஆம் ஆண்டில் மந்தநிலையை பிரதிபலிக்கும் வகையில் -0.02% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2020 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்றின் தாக்கத்தால் -4.6% ஆக சரிந்தது. 2021 இல் தற்காலிக மீட்சியாக 4.2% வளர்ச்சி பதிவானாலும், 2022 ஆம் ஆண்டு நாடு அதிகாரப்பூர்வமாக பொருளாதார நெருக்கடியை அறிவித்த நிலையில் வளர்ச்சி -7.3% என கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. 2023 ஆம் ஆண்டிலும் -2.0% என்ற எதிர்மறை வளர்ச்சி தொடர்ந்தது. எனினும், அதன் பின்னர் 2024 ஆம் ஆண்டில் பொருளாதாரம் மீள்ச்சி பெற்று 5.0% வளர்ச்சியை பதிவு செய்ததுடன், அந்த முன்னேற்றம் 2025 ஆம் ஆண்டிலும் தொடர்ந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இத்தரவுகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதாரம் படிப்படியாக நிலைநிறுத்தம் மற்றும் மீட்பு பாதையில் நகர்ந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

அத்துடன், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தலைக்குரிய (தனிநபர்) உள்நாட்டு வருமானம் (GDP per capita) 5000 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. அதாவது, 2025 ஆம் ஆண்டுக்கான தனிநபர் உள்நாட்டு வருமானம் 5,003 டொலராக பதிவாகி, நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் 4,546 அமெரிக்க டொலராக இருந்த இந்த அளவு, ஒரே ஆண்டிற்குள் 457 டொலர் அதிகரித்துள்ளது. இந்த உயர்வு வெறும் புள்ளிவிவர மாற்றமாக மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார நிலைநிறுத்தம், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் வருமானச் சுழற்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் தெளிவான வெளிப்பாடாகும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேற்கண்ட உத்தியோகபூர்வமான தரவுகளில் இருந்து நாடு பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருவது புலப்படுவதோடு, அது மக்களிடமும் போய் சேர்வது தெளிவாகிறது. சாதாரண மக்களை ஓரம்கட்டி தனியாக நாட்டின் வருமானம் அதிகரிப்பதோ, திறைசேரி நிரம்புவதோ, உலக பொருளாதாரத்தின் முன்னணி நாடாக மிளர்வதோ ஜனநாயகம் கிடையாது. பொருளாதார வெற்றி எல்லா மக்களையும் முறையாக சென்றடைவதே உண்மையான ஜனநாயகமாகும். இந்த நடைமுறையை திசைகாட்டி ஆட்சி ஏந்தி நிற்கின்றது.

இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, மீளுருவாக்கத்தின் பாதையில் நகர்ந்து வருவதை இன்று பல துறைகளின் தரவுகளும் நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. திறைசேரி வருவாய் உயர்வு, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, தனிநபர் வருமான முன்னேற்றம், சமூக நலத்திட்ட விரிவாக்கம் மற்றும் அடிப்படை துறைகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகியவை, நாட்டின் பொருளாதார அடித்தளம் மீண்டும் பலப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றன. இது வெறும் கணக்கெடுப்பு வெற்றியாக அல்லாது, நீண்டகால நிலைத்தன்மையை நோக்கிய மாற்றத்தின் ஆரம்ப கட்டமாகப் பார்க்கப்படுகிறது. முன்பை விட உழைக்கின்ற மக்கள் ஓரளவுக்கு நிம்மதியாக பெருமூச்சு விடும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்பை விட ஓரளவு கூடுதலான பணத்தை செலவு செய்து கொஞ்சம் கூடுதலாக தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. பொருளாதார நெருக்கடி சார்ந்த தனிநபர் உள பாதிப்பு ஓரளவு குறைந்திருக்கிறது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஈடுபாட்டுடன் பொழுதை கழிக்க முடிகிறது. இப்பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை ஆரோக்கியமாக மாற்றப்படுவதையே சமூக ஜனநாயகம் என்கிறோம்.

அதாவது, ஒரு நாட்டின் பொருளாதார வெற்றி என்பது புள்ளிவிவரங்களில் மட்டும் தெரியும் வளர்ச்சி அல்ல. அதன் பலன் பொதுமக்களின் வாழ்க்கையில் உணரப்பட வேண்டும். அதாவது, ஒவ்வொரு வீட்டிலும் உறுதிபெறவேண்டும். வருமானம் உயரும் போது வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும். வளர்ச்சி அதிகரிக்கும் போது வாய்ப்புகளும் விரிய வேண்டும். அந்த அடிப்படையில், மக்களை மையப்படுத்திய நிர்வாகம், ஒழுங்கமைக்கப்பட்ட நிதி முகாமைத்துவம் மற்றும் சமநிலையான வளர்ச்சி நோக்கங்களோடு, இலங்கையின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றிட மக்களை அரவணைத்துக்கொண்டு திசைகாட்டி அரசாங்கம் தன்னம்பிக்கையுடன் நகர்கிறது.

சதீஸ் செல்வராஜ்
lankatruth


 


Post a Comment

0 Comments