Ticker

6/recent/ticker-posts

“அதெல்லாம் வீண் நேர விரயம்; அமெரிக்காவிடமே முழு அதிகாரம் உள்ளது” - டிரம்ப்


ஈரான் - அமெரிக்கா இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை ரத்தான நிலையில், மீண்டும் வளைகுடா நாடுகளில் போர் வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹோர்மூஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டு உலகமே ஸ்தம்பிக்கும் சூழல் நிலவுகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக 2 வாரத்திற்கு போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏறக்குறைய தோல்வியில் முடிந்த போதும், போர் நிறுத்தம் நீடிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அதிபர் டிரம்ப்பின் மருமகன் Jared Kushner மற்றும் சிறப்பு அதிகாரி Steve Witkoff ஆகியோர் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்தது. இதற்கிடையே இஸ்லாமாபாத் சென்ற ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் Ishaq Dar மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனிர் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, போர் நிறுத்தம் குறித்த ஈரானின் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபிடம் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க குழுவை சந்திக்க அப்பாஸ் அராக்சி மறுத்துவிட்டதாகவும், ஈரானின் நிலைப்பாடு குறித்து பாகிஸ்தான் தரப்பு அமெரிக்காவிடம் தெரிவிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையை தவிர்த்த அப்பாஸ் அராக்சி, தனி விமானம் மூலம் மீண்டும் தெஹ்ரான் சென்றார். ஈரானின் நடவடிக்கையால் கடும் அதிருப்திக்குள்ளான அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக அமெரிக்கா குழுவின் பயணத்தை ரத்து செய்தார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இஸ்லாமாபாத் செல்ல இருந்த அமெரிக்க குழுவின் பயணத்தை ரத்து செய்ததாகவும், பேச்சுவார்த்தைக்காக எடுக்கும் முயற்சிகள், வீண் நேர விரயம் தேவையற்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானின் தலைமைக்குள்ளேயே யாரிடம் அதிகாரம் உள்ளது என்பதில் உட்கட்சி பூசல் நிலவுவதாக விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்காவிடமே முழு அதிகாரம் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டிரம்ப்பின் பதிவால் மீண்டும் அமெரிக்கா - ஈரான் இடையே போர் வெடிக்குமோ என்ற பதற்றம் நிலவுகிறது.

news18


 


Post a Comment

0 Comments