
இந்திய எண்ணெய்க் கப்பல்களுக்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, உண்மையில் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அந்நாட்டு ராணுவமே விடுத்த நேரடி சவால் என சொல்லப்படுகிறது.
இந்திய நேரப்படி (ஏப்ரல் 18) இரவில் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல் மீது ஈரானால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல், கடல்சார் பதற்றங்களாக பார்க்கப்பட்ட நிலையில், ஈரானுக்குள் நடந்து வரும் அதிகார மோதலின் வெளிப்பாடே இது என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் சிஎன்என்-நியூஸ்18-க்கு தெரிவித்துள்ள தகவல்களின்படி, “இந்திய எண்ணெய்க் கப்பல்களுக்கு அருகே நடத்தப்பட்ட இந்த 'துப்பாக்கிச் சூடு', உண்மையில் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அந்நாட்டு ராணுவமே விடுத்த நேரடி சவால்” என்று தெரிகிறது. இதன் முழுமையான பின்னணி என்ன என்று இங்கே பார்க்கலாம்...
ஈரான் - அமெரிக்கா இடையேயான முரண்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்குள் அதிகார சமநிலை முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி இறந்த பிறகு, தலைமை பொறுப்பில் பெரும் வெற்றிடம் உருவானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஈரானின் ஒட்டுமொத்த அமைப்பும் சிதைந்துவிட்டதென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பான ஐ.ஆர்.ஜி.சி-யும் வெளியுறவு அமைச்சகமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அணுசக்தித் திட்டம் - ஏவுகணை அமைப்புகள் - ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற அமைப்புகள் தொடர்பான முடிவுகளில் சமாதானமான / மென்மையான முடிவுகளை எடுப்பதாக, IRGC கருதுகிறது. இப்படி மென்மையாகவோ சமாதானமாகவோ இருப்பது, நாட்டு (ஈரான்) நலனுக்கு சரிவராது என்பது IRGC-யின் நிலைப்பாடு. இதனால்தான் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் வெளியுறவு அமைச்சகம் முழுமையாக திறந்தபோது, IRGC அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்கா தனது முற்றுகையை விலக்காத வரை நீரிணை திறக்கப்படாது என IRGC தெரிவித்து, திறக்கப்பட்டு ஒருநாளுக்காளகவே மீண்டும் மூடியது.
IRGC மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இடையேயான இந்த மோதல், அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
IRGC-யின் கோபத்திற்கு பின்னுள்ள உண்மை காரணம் என்ன தெரியுமா? IRGC, தனது நெருங்கிய அதிகாரியான முகமது பாகர் சுல்கத்ஜார் என்பவரை அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக் குழுவில் இணைக்க விரும்பியது. இதன் மூலம் பேச்சுவார்த்தையில் நேரடி கட்டுப்பாடு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் சுல்கத்ஜாருக்கு பேச்சுவார்த்தையில் அனுபவமில்லை எனக்கூறி அராக்சி எதிர்த்துவிட்டார். இதனால் பேச்சுவார்த்தையில் தங்கள் பங்கு இல்லை என்பதே IRGC-யின் கோபத்திற்கு காரணம்.
ஈரான் ராணுவத்தின் கவலை என்ன? அலி கமேனியின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட தலைமை வெற்றிடம், IRGC-யை முன்பிருந்ததைவிட ஆக்ரோஷமாக மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஈரான் ஒருமித்த நாடாக இல்லாமல், பல்வேறு சக்திகளால் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படும் ஒழுங்கற்ற நாடாக இருக்கிறது. இதனாலேயே இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்காக ஈரான் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினாலும், IRGC இதில் மாறுபட்ட நிலைமையையே கொண்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் ஈரானுக்குள் உள்நாட்டளவில் பிரச்சனை வரலாம் என கணிக்கப்படுவதால், அந்நாட்டு அதிகாரிகளே அதிர்ச்சியில்தான் உள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments