Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-112


கல்லடிவாரத்தில் செரோக்கி முதலில் காலடி வைத்தான். அவனைத் தொடர்ந்து நிலத்தில் இறங்கிய இர்வின், தனக்கு பரிச்சயமில்லாத புது நிலமொன்றில் கால் பதித்ததை உணர்ந்தான்! அவனுக்கு அடுத்தபடியாக செரோக்கியின் தந்தை மெதுமெதுவாகத்  தரைதொட்டார். இர்வினுக்கு இந்த நிகழ்வு, வேற்றுக் கிரகமொன்றில் தான்காற்பதிப்பது போன்ற உள்ளுணர்வையும், நீலாம்ஸ்ட்ரோங், கொல்வினு டன்  நிலவில் காலடி வைத்த நினைவையும் அவனுக்கு உணர்த்தியது!

அந்த வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்வு, தனது பிறந்த நாளில் நிகழ்ந்ததாக அவனது பெற்றோர் பெருமைப்படக் கூறிக் கொள்வர்!

இர்வின் தனது பட்டப்படிப்பின்போது, வேற்றுக் கிரகங்கள் பற்றிய பாடவிதானத்தில், சந்திரனில் மனிதன் காலடி வைத்தது பற்றிப்படித்தது அவனுக்கு நினைவிருக்கின்றது! 

தூரத்தில் தெரிகின்ற சந்திரனைக்காட்டி, அதில் மனிதன் காலடி வைத்துவிட்டு, மறுபடி பூமிக்குத்  திரும்பி வந்தான் என்பதை செரோக்கியிடம் கூறினால், அதனை அவன் ஒரு போதும் நம்பப்போவதில்லை!

கிணற்றுத் தவளை போன்றதொரு வன வாழ்க்கையில், தமக்கருகில் இருப்பதைத் தவிர, தூரத்தில் இருப்பவைகள் பற்றிய சிந்தனைப் போக்கில்லாமல் வாழ்கின்ற அற்புதமான வாழ்க்கையைத்தான் இர்வின் இந்தக் கானகத்து மனிதர்களிடம் காண்கின்றான்!

இவ்வாறான  வாழ்க்கையிலிருந்து நண்பன் செரோக்கியை மீட்டெடுத்து வந்துவிட்டதில், தான் ஓரளவில் வெற்றி கண்டுவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் இர்வின், தனது இலக்கை நோக்கி முன்னோக்கிச் சென்றால் ஒட்டுமொத்த வனவாசிகளையும்  நகர்ப்பக்கம் திருப்பிவிடலாம் என நம்பினான்! 

கல்லடிவாரத்தில் தரையிறங்கிய மூவரும், நிலத்தில் விரவிக்கிடக்கும் பொன்னிறச் சறுகுகளில் காலடி வைத்த படி  நடந்து, முதியவர் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த மரத்தடியை அடைந்தனர்! மனித நடமாட்டம் இல்லாத இவ்விடத்தில் தியானத்தைத் தவிர அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்?

அவர்  தியானத்தின் இறுதி நிலைக்கு வரும்வரைக்கும் மூவரும்  பொறுத்து நின்றிருந்தனர்.

முதியவர் கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே செரோக்கியும், அவனுடன் கூட இருவரும்  நின்று கொண்டிருப்பதைக் கண்டார்.

“வா குழந்தை, வா...”

‘நல்லது பெரியவரே!’ என்பதுபோல் பணிவாகத் தலையசைத்தான் செரோக்கி!

“நீயும் அப்படி அமர்ந்து... அவர்களையும் அமரச்செய்!” என்றார் முதியவர்.

மூவரையும் ஒருவர் மாறி ஒருவராகப் பார்த்த அவர், இர்வினைக் சற்றுக் கூர்ந்து உற்றுநோக்கலானார்.   

“இந்த நகரத்துக் பையன் எவ்வாறு உங்களோடு இணைந்து கொண்டான்?” - அவரது  கேள்வியில் ‘நகரத்துப் பையன்’ என்ற சொற்களைக் கேட்டதும் செரோக்கியின் தந்தை திடுக்கிட்டுவிட்டார்!

தனது சிறுபிராயத்தில் விளையாட்டு மைதானத்தில் 
பெற்றோருடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த வேளை, மரவேரடியில் நின்றுகொண்டு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த செரோக்கியிடம் பரிதாபம் கொண்டு இணைந்து பழகத் தொடங்கிய இர்வின், என்றுமே தான் ஒரு நகரவாசி  என்பதை 'புரோகோனிஷ்' மக்களுக்குக் காட்டிக் கொண்டதில்லை.   மரவேரடியில் வைத்துத் தனது நகரத்து வேஷத்தைக் களைந்து, வனவாசிகள் வேசத்தோடுதான் எப்போதும் அவன்  ‘புரோகோனிஷ்’ பகுதிக்குள் நுழைவதுண்டு. 

இன்று கூட அவன் அப்படித்தான்  வேசமிட்டு வந்திருந்தான். ஆனால் முதியவர் அவனை ‘நகரத்துப் பையன்’ என்று  சுட்டியபோது அவன் உட்பட, செரோக்கியும் திடுக்கிட்டனர்! 

தனது மகனின் நண்பன் கானகத்தில் எங்கோ இருந்து வரும்  ஒரு வனவாசி என்றுதான் இன்றுவரை நம்பிக்கொண்டிருந்த செரோக்கியின்  தந்தைக்கு, இந்தச் செய்தி வியப்பைத் தந்திருக்க வேண்டும்!

‘வெளியார் எவரையும் வனத்துக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடாது’ என்று காலாகாலமாகப் பிடிவாதமாக இருந்துவரும் நம்மவறுக்கு, இர்வின் ஒரு  ‘நகரவாசி’ என்பது தெரிந்தால் என்னவாகும்? 

ஒருகணம் சிந்தித்துப் பார்த்த அவர், அவ்வேளையில்  தனது அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடந்துபோவதே  மேலானது என நினைத்தார்.

முதியவருடன் மூவரும்  சர்வசாதாரணமாக அளவளாவிக்கொண்டிருந்தபோது,  திடீரென   இர்வினின் பெயரைக்கேட்ட அவர், பின்னர் அவனது தாயின் பெயரையும் கேட்டறிந்து கொண்டவராக, பக்கத்திலிருந்த “பக்கிஸ் பெட்டி”யை இழுத்தெடுத்துத் தன்முன் வைத்து புராதன நூலொன்றையும் , குறிப்புப் புத்தகத்தையும் வெளியில் எடுத்தார்.

பெட்டிக்குள்ளிருந்து  எடுத்த எழுதுகோல் ஒன்றினால் குறிப்புப் புத்தகத்தில் இர்வின் குறிப்பிட்ட பெயர்களை எழுதிக் கொண்ட அவர், பெயரை உச்சரித்தபடி மனக்கணக்குப் போட ஆரம்பித்தார்!

“சில காலங்களில் உலகத்தில் மனித இனத்துக்கு நிகழப்போகும் பாரிய அழிவொன்றை நீ தடுத்து நிறுத்த விளைந்துள்ளாய்! அது உன்னிலிருந்தும் நழுவிச் சென்றுவிட்டது குழந்தாய்!” என்று நிதானமாகக் கூறிமுடித்தபோது, இர்வின் அதிர்ச்சிக்குள்ளானான்!  

(தொடரும்)


 


Post a Comment

0 Comments