
முதியவரின் வார்த்தைகளைக் கேட்டதும் குகையிலிருந்து குள்ளர்கள் எடுத்துச் சென்ற புராதன நூலின் நான்கு பக்கங்கள்தான் இர்வினின் நினைவுக்கு வந்தது. அந்தப் பக்கங்களில் அடிக்குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் ஒருவகையில் இவர் குறிப்பிடும் விடயத்துடன் ஒப்பாகுமோ என்ற கேள்வி அவனுக்குள் உண்டானது.
“குழந்தாய், சிலகாலங்களுக்கு முன்னர் கிரேக்கத்தின் “கிரீடி” பகுதியிலிந்து பெற்றோருடன் நான் இங்கு வந்தபோது, கால் சறுக்கி விழுந்து விட்டேன். இங்கு விழுகின்றவர்கள் எவரும் உயிர் பிழைப்பதில்லை
என்ற வனவாசிகளின் பேச்சை எனது பெற்றோர் நம்பினர் போலும்!
நான் இறந்து விட்டேன் என்ற நினைப்பில் அவர்கள் என்னைத் தேடாமல் இங்கிருந்து சென்று விட்டனர்!” என்றவாறாகத் தன் கதையைக் கூற ஆரம்பித்த முதியவர், சற்று நிறுத்தியவேளை, இர்வின் குறுக்கிட்டான்.
“பெரியவரே, இப்போது உங்களின் வயது என்னவாக இருக்கும்?”
“அதுவொன்றும் எனக்குத் தெரியாது குழந்தாய்!” என்று கூறிவிட்டு, தான் இருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலை வில் தெரிந்த ஒரு மாமரத்தைச் சுட்டிக்காட்டி, அதன் பக்கத்தில் ஒரு கிடங்கு இருப்பதாகவும் அதற்குள் இருக்கின்ற விதைகளைக் கணக்கிட்டால் எனது வயது தெரிந்துவிடும் என்று கூறியதும், இர்வினும், செரோக்கியும் கிடங்கின் பக்கத்தில் சென்று, அதனை எட்டி நோக்கிய போது அதற்குள் மாம்பழ விதைகள் குவிந்து கிடப்பதை கண்டனர்.
அவற்றை எண்ணிவிடவேண்டுமென்ற அவாவில், செரோக்கி விதைகளை வெளியே எடுக்க, இர்வின் எண்ணலானான்.
சரியாக எழுபத்தெட்டு விதைகள் இருந்ததால், பெரியவரின் வயது அதிலிருந்தும் சற்று அதிகமாக இருக்கலாம் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டனர்!
தூரத்திலிருந்து இவற்றையெல்லாம் கவனித்துக்
கொண்டிருந்த செரோக்கியின் தந்தை, இர்வினின் புத்திசாதுரியத்தை நினைத்து வியந்து கொண்டார்!
வெளியுலகில் வாழ்வோர் கற்கையில் கவனம் செலுத்தித் தமது அறிவை மேம்படுத்திக் கொள்வதே அதற்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டவராக இருந்தபோது, இர்வின் அவரை நெருங்கி வந்தான்!
“என்னை மன்னித்து விடுங்கள் தந்தையே!” என்றவாறு அவரது காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்கலானான்!
“எழுந்திரு மகனே, என்னிடம் நீ ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்?” என்றவாறாக அவனது தோள்களைப் பிடித்து, அவனை எழுப்பிவிட்டார்! நடப்பதை தூர இருந்து பார்த்த செரோக்கி குழம்பிப்போய்விட்டான்! ‘தனது நண்பன், தந்தையிடத்தில் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்?’ எதையும் இலகுவில் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் அந்தக் கானகத்து இளைஞன் தவியாய்த் தவிக்கலானான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments