
அன்று தொடங்கிய மோகன்-மைதிலி உரையாடல்... அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தபோது, அது அவர்களுக்குள் வழக்கமாகிப் போனது!
ஓர் அந்நியர்... அதுவும் முகம் தெரியாதவர்... தன்னிடம் இப்படிப் பேசுவார் என்று அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
கணவர் மறைந்த பிறகு... உலகம் தன்னை மறந்துவிட்டது போன்ற உணர்வினால் உந்தப்பட்டிருந்த மைதிலி, தன் கடந்தகால நினைவுகளை ஆதரவாகக் கொண்டுதான், முகநூல் பக்கத்தை வடிவமைத்து எழுதி வரலானாள்!
சிலபல கேள்வி-பதில்களுக்குப் பிறகு மோகன்-மைதிலி உரையாடல் அவ்வப்போது முற்றுப் பெற்றாலும், தொடங்கப்பட்ட அவர்களின் உரையாடல், நாட்கணக்காகத் தொடரத்தான் செய்தது!
தன் கணவருடனான கடந்தகால நினைவுகளை மோகனுடன் அவள் பகிர்ந்து கொண்டபோதெல்லாம்... அவர் தன்னை எப்படிச் சிரிக்க வைத்தார், தன் எதிர்காலக் கனவுகளை அவர் எப்படியெல்லாம் தன்னுடன் பகிர்ந்து கொண்டார்... என்றெல்லாம் தன் மனதிலிருந்ததைக் கொட்டித் தீர்த்தாள்.
எல்லாவற்றையும் பக்குவமாகக் கேட்ட மோகன்; தன் ஒருதலைக் காதலை அழுத்தம் கொடுக்காமல் அவளிடம் மெதுவாக வெளிப்படுத்தவும் தவறவில்லை!
“நீங்கள் எனக்கு மறுவாழ்வில் எதிர்பார்ப்பு ஒன்றைக் கொடுத்துவிட்டீர்கள் மோகன்; ஆனால்... என் இதயம்தான் இன்னும் முழுவதுமாகக் குணமடையவில்லை. என் கணவரின் நினைவு இன்னும் என்னுடன் ஒழிந்து வாழ்கின்றது!”
“அந்த நினைவை நீங்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம். நான் அதற்கு போட்டியாக வரவுமில்லை. உங்களுடன்... நான் வாழ்க்கையில் மெதுவாக நடக்க விரும்புகிறேன்.”
காலை வணக்கத்துடன் தொடங்கிய அவர்களின் உரையாடல்கள், மதியத்தில்,
“சாப்பிட்டீங்களா?" என்ற கேள்வியைத் தொட்டதும், இரவுநேர நீண்ட உரையாடலாக மாறலானது!
மூடப்பட்டிருந்த தனது உலகத்தின் கதவுகளை மைதிலி மெல்லத் திறக்கலானாள்.
“அவர் இருந்தப்போ… நான் எதற்குமே பயப்படல்ல மோகன்” என்று குறிப்பிட்ட மைதிலி,
“இப்போ ஒவ்வொரு இரவும் எனக்கு ரொம்ப நீளமா இருக்கு…” என்று முன்னுக்குப்பின் முரணாகப் பேசலானாள்.
“இப்போ நீங்க தனியா இல்ல மைதிலி” என்ற மோகனின் ஆறுதல் வார்த்தை,
“கடந்தகால நினைவுகள் மறக்கக் கூடியதல்ல; அவை பொக்கிஷங்கள்; ஆனா… அந்த நினைவுகளோடவே வாழ்றதுக்கு, கூட யாரோ ஒருத்தர் தோளா இருக்கலாமில்ல?”
அவள் அமைதியானாள்.
அந்த அமைதிக்குள்... அவளது இதயம் பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒரு பாதுகாப்பை உணர்ந்தது!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments