Ticker

6/recent/ticker-posts

வெள்ளக் குகைக்குள் சிக்கிய 7 பேர்: 7ஆவது நாளாக வேட்டை


மத்திய லாவோஸில் (Laos) வெள்ளம் சூழ்ந்த குகையொன்றுக்குள் சிக்கியுள்ள ஏழு கிராமவாசிகளைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கை, செவ்வாய்க்கிழமை (இன்று) 7ஆவது நாளாகவும் நீடித்துள்ளது. எனினும், அந்தப் பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புக்குழுவினர் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதோடு, குகைக்குள் சிக்கியவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதும் இன்னும் அறியப்படவில்லை.

வெள்ளப்பெருக்கால் மூடிய நுழைவாயில்

லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுவினர் வழங்கிய தகவல்களின்படி, கடந்த மே 19ஆம் திகதியன்று சய்சம்பூன் (Xaisomboun) மாகாணத்தில் உள்ள இந்த குகைக்குள் கிராமவாசிகள் நுழைந்துள்ளனர். எனினும், திடீரென பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குகையின் வெளியேறும் வழி முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வரும் லாவோஸின் 'மக்களுக்கான தன்னார்வ மீட்பு அமைப்பு' (Rescue Volunteer for People) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செவ்வாய்க்கிழமைக்கான கூட்டு மீட்புத் திட்டத்தின்படி, குகைக்கு மேலே உள்ள காற்றுத் துவாரங்களை (Air shafts) ஆராய்ந்து, அதன் மூலம் உள்ளே செல்வதற்கான மாற்று வழிகளைக் கண்டறியும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, இந்த மீட்புப் பணிக்கு ஆதரவளிப்பதற்காக அண்டை நாடான தாய்லாந்திலிருந்தும் நிபுணத்துவம் வாய்ந்த மீட்புக்குழுவினர் கடந்த வார இறுதியில் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மீட்புக்குழுவினரின் கூற்றுப்படி, குகைக்குள் தேங்கி நிற்கும் வெள்ள நீரில் மூழ்கிச் செல்லும் 'டைவர்ஸ்' (Divers) எனப்படும் முத்துக் குளிப்பவர்கள், குறுகிய அந்த குகைக்குள் சுமார் 100 மீற்றர் ஆழம் வரை பயணித்துள்ளனர். தற்போது அவர்களால் சென்றடைய முடிந்த தூரத்திலிருந்து, மேலும் 30 மீற்றர் தொலைவிலேயே கிராமவாசிகள் சிக்கியிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். இதனால் தேடுதல் முயற்சியை இலகுவாக்கும் பொருட்டு, குகைக்குள் இருக்கும் தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியே இறைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவம் நடந்துள்ள இடமானது, தலைநகர் வியந்தியனிலிருந்து (Vientiane) வடக்கே சுமார் 120 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சய்சம்பூன் மாகாணத்தின் 'லோங்செங்' (Longcheng) என்ற மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. மீட்புப் பணிகளுக்குக் கடுமையான முட்டுக்கட்டையாக இருக்கும் கரடுமுரடான மலைப்பாதை மற்றும் கனமழை குறித்தான விபரங்களை மீட்பாளர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தாய்லாந்து மீட்புக்குழுவினரால் இணையத்தில் பகிரப்பட்ட காணொளிகளின்படி, குகையின் நுழைவாயிலை அடைவதற்கே சுமார் 4 கிலோமீற்றர் தூரம் செங்குத்தான மலைப்பாதையில் கால்நடையாகச் செல்ல வேண்டியுள்ளது. மேலும், அந்த குகையின் நுழைவாயிலும் மிகவும் செங்குத்தாகவும், பாறைகள் நிறைந்ததாகவும் காணப்படுவதுடன், ஒரே நேரத்தில் ஒரு நபர் மட்டுமே சிரமப்பட்டு நுழையக்கூடிய அளவுக்கு மிகக் குறுகியதாக உள்ளது.

கிராமவாசிகள் ஏன் குகைக்குள் சென்றார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், அவர்கள் அங்குள்ள தங்கப் படிவுகளைத் (Gold deposits) தேடியே உள்ளே சென்றதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து லாவோஸ் மீட்புக் குழுவைச் சேர்ந்த பூன்காம் லுவாங்லாத் (Bounkham Luanglath), அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திற்குத் தெரிவிக்கையில், “பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு, இந்த குகைக்குள் நுழைய வேண்டாம் என அதிகாரிகள் பலமுறை எச்சரித்த போதிலும், தங்கம் தேடுவதற்காக உள்ளூர்வாசிகள் அடிக்கடி இந்தக் குகைக்குள் சென்று வந்துள்ளனர்,” என்றார்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைந்த தனிநபர் வருமானத்தைக் கொண்ட நாடுகளில் லாவோஸும் ஒன்றாகும். இங்கு சராசரி தனிநபர் வருமானம் சுமார் $2,000 முதல் $2,500 (ஆண்டுக்கு) வரை மட்டுமே காணப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியடையாத கிராமப்புறங்களில் இந்த வருமான அளவு இதைவிட இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த வறுமை நிலையே இத்தகைய ஆபத்தான முயற்சிகளுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

tamilmirror


 


Post a Comment

0 Comments