Ticker

6/recent/ticker-posts

ட்ரோன், காட்சிகளுக்கு ’லைக்’ :7 இலங்கையர் நாடு கடத்தல்


மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் யுத்த நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள், காணொளிகளைத் தங்களது கைபேசிகளில் வைத்திருந்தமை, மற்றும் சமூக வலைத்தளங்களில் அவற்றுக்கு 'விருப்பம்' (Like) தெரிவித்து கருத்துப் பகிர்ந்தமை (Comments) போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தின் (அபுதாபி) பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞர்கள் ஏழு பேர் (07) அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் புதன்கிழமை (27) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அபுதாபியிலிருந்து புதன்கிழமை (27)  இரவு 09:25 மணியளவில், 'எயார் அரேபியா' விமான சேவைக்குச் சொந்தமான 3L-708 என்ற விமானம் மூலம் இந்த இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்களில்:

அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த இசுறு பிரதீப் த சொய்சா (வயது 29),
மாரப்பன பகுதியைச் சேர்ந்த நிலங்க நாமல் அபேவர்தன (வயது 23),
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த கிஹான் தனுஷ்க (வயது 33),
பொரள்ளை பகுதியைச் சேர்ந்த ஹேவகே கலண தத்சர ஜயரத்ன (வயது 23),
பொரள்ளை பகுதியைச் சேர்ந்த மனோரத்ன ஆரச்சிகே இஷான் ஹர்ஷ பிரியந்த (வயது 27),
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஷஹின் அஃப்ராக் நிலவ்டீன் (வயது 25) மற்றும்
வத்தளை பகுதியைச் சேர்ந்த ஃபஸ்லூன் நிஸார் அப்துல் நஸார் (வயது 32) ஆகிய இளைஞர்கள் அடங்குவர்.
இந்த இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும், இலங்கைக்குள் இவர்கள் பாதாள உலகக் குழுவினர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்கள் அல்லது போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளனரா என்பது குறித்து கண்டறிவதற்காக விசேட கூட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள், அரச புலனாய்வுச் சேவை (SIS) அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகள் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களுடன் சேர்த்து அபுதாபியில் கைது செய்யப்பட்ட 21 பேரைக் கொண்ட முதலாவது குழுவினர், கடந்த மே 22 ஆம் திகதி இரண்டு விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் அவர்களிடம் இலங்கையில் வைத்து நடத்தப்பட்ட தீர்க்கமான விசாரணைகளின் போது, அக்குழுவில் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த குற்றவாளிகள், பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (27) அன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்த ஏழு இளைஞர்களும், மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்

tamilmirror


 


Post a Comment

0 Comments