Ticker

6/recent/ticker-posts

இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில், எட்டு வயதுச் சிறுமி ஒருவர் தனது 
பள்ளிப் பையில் சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள பாம்பைக் கொண்டு வந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டாம் வகுப்பு பயிலும் சாச்சா என்றழைக்கப்படும் மெய்சா அரிஃபா கார்டிவா, தனது பள்ளிப் பையிலிருந்து அந்தப் பாம்பை வெளியே எடுத்து, எவ்வித அச்சமுமின்றி நண்பர்களுடன் விளையாடும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்தப் பையில் உணவு இருப்பதாக முதலில் சக மாணவர்கள் நினைத்த நிலையில், அதிலிருந்து பிரம்மாண்டமான பாம்பு வெளிப்பட்டதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். 

'சோரோ' (Zoro) என்று பெயரிடப்பட்ட அந்தப் பாம்பு ஒரு வகை ராஜா தீக்குஸ் பாம்பு (Raja Tikus) என்றும், அத்தகைய பல பாம்புகளைத் தான் வீட்டில் வளர்த்து வருவதாகவும் அந்தச் சிறுமி வெகு இயல்பாகத் தெரிவித்துள்ளார். 

சிறுவயதிலிருந்தே விலங்குகளை மீட்பது தொடர்பான விழிப்புணர்வு அவருக்கு இருந்ததால், ஊர்வனவற்றின் மீது அவருக்குத் தனி ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்துச் சிறுமியின் தந்தை ஜெபி கார்திவா கூறுகையில், தனது மகளின் பாதுகாப்பு குறித்துத் தான் எப்போதும் கவனமாக இருப்பதாகவும், வீட்டில் வளர்க்கப்படும் பாம்புகள் அனைத்தும் நஞ்சற்றவை, பழக்கப்பட்டவை என்றும் விளக்கமளித்துள்ளார். 

குறிப்பாக, 'ராஜநாகம்' போன்ற நச்சுப் பாம்புகளைத் தொடத் தனது மகளுக்குக் கடுமையான தடை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எட்டு வயதிலேயே தேள், பாம்புகளை லாவகமாகக் கையாண்டு வரும் இந்தச் சிறுமி, எதிர்காலத்தில் ஒரு 'பாம்புப் பிடி வல்லுநராக' (Snake Charmer) வருவதையே தனது இலட்சியமாகக் கொண்டுள்ளார். 

பொழுதுபோக்கிற்காகச் செய்யப்பட்டாலும், பள்ளி வளாகத்தில் இத்தகைய செயல்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

nambikkai


 


Post a Comment

0 Comments