
மத்திய கிழக்கு நாடுகள் மத்தியிலான இந்த பதற்றங்கள் யாவும், நட்பு ரீதியாக ஈரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்குமே பின்னடைவையே கொடுத்துள்ளன.
இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் விசித்திரமான சம்பவமொன்று நடந்துள்ளது. அதன்படி ஒரு நாட்டின் பிரதமர், தான் மற்றொரு நாட்டிற்குச் சென்றதாகக் கூற, அந்த நாடோ அப்படி ஒரு பயணமே நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. இது எங்கு நடந்தது? எந்த இரு நாடுகளுக்கு இடையே நடந்தது? பார்க்கலாம் வாங்க...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் கடந்த மே 13ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ரகசியப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீதைச் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த அறிக்கை வெளியான அடுத்த நாளே, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் இதனை முற்றிலும் மறுத்து அறிக்கை வெளியிட்டது. அதில் நெதன்யாகுவின் அலுவலகம் கூறிய தகவல்கள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்று அமீரகம் தெரிவித்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பகிரங்கமானவை என்றும், அவை வெளிப்படைத்தன்மையற்ற அல்லது அதிகாரப்பூர்வமற்ற ரகசிய ஏற்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்றும் அமீரகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
முன்னதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து அமீரகத்தின் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க இஸ்ரேல் தனது புகழ்பெற்ற 'அயன் டோம்' வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அதற்கான ராணுவப் பணியாளர்களையும் அமீரகத்திற்கு அனுப்பியுள்ளதாக அண்மையில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இஸ்ரேல்-அமீரக ராணுவக் கூட்டுறவு குறித்த இந்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "இஸ்ரேலுடன் கைகோர்ப்பது அமீரகத்திற்குப் பாதுகாப்பைத் தராது" என எச்சரித்திருந்தார். இந்நிலையில்தான் தற்போது இஸ்ரேல் மற்றும் அமீரகம் இடையே முரண் ஏற்பட்டுள்ளது.
மற்றொருபக்கம் இஸ்ரேல் மற்றும் அமீரகம் இணைந்து புதிய ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு கூட்டு நிதியை உருவாக்கியுள்ளன. இஸ்ரேலிடம் தொழில்நுட்பம் உள்ளது, ஆனால் நிதிப்பற்றாக்குறை உள்ளது; அமீரகத்திடம் நிதி உள்ளது, தொழில்நுட்பம் இல்லை என்பதால் இந்த கூட்டுமுறை இருவருக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
அதேபோல ஈரான் தாக்குதலின் போது மற்ற அரபு நாடுகள் தங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்ற அதிருப்தி அமீரகத்திற்கு உள்ளது. இதனால், அது அரபு நாடுகளின் பொதுவான நிலைப்பாட்டைத் தாண்டி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைத் தனது உண்மையான பாதுகாப்பு கூட்டாளிகளாகப் பார்க்கத் தொடங்கியுள்ளது. அமீரகம் OPEC அமைப்பிலிருந்து அண்மையில் வெளியேறியதும் இந்தத் தன்னிச்சையான போக்கின் ஒரு பகுதியே ஆகும்.
என்னதான் அமீரகம் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்து ஈரான் பலவீனமடைவதை சவுதி வரவேற்றாலும், அந்தப் போரின் முடிவில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரே ஆதிக்க சக்தியாக உருவெடுப்பதை சவுதி விரும்பவில்லை. இதனால் இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்க சவுதி மறுத்து வருகிறது. இஸ்ரேலைச் சார்ந்து இருக்க விரும்பாத சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து ஒரு புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த ரகசிய ஒப்பந்தத்தின்படி, சவுதியின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் தனது 8,000 படை வீரர்கள், போர் விமானங்கள், ட்ரோன் பிரிவுகள் மற்றும் சீன தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்பை சவுதியில் நிறுத்தியுள்ளது.
இப்படியாக மத்திய கிழக்கு நாடுகள் மத்தியிலான இந்த பதற்றங்கள் யாவும், நட்பு ரீதியாக ஈரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்குமே பின்னடைவையே கொடுத்துள்ளன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments