
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. மழை காரணமாக 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், லக்னோ வீரர் மிட்செல் மார்ஷின் ருத்ரதாண்டவம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்தார். வெறும் 56 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் குவித்து அசத்தினார். இவருக்குத் துணையாக கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் வெறும் 10 பந்துகளில் 32 ரன்கள் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாச, லக்னோ அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.
விராட் கோலி டக் அவுட்
மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் (DLS) முறைப்படி, ஆர்சிபி அணிக்கு 19 ஓவர்களில் 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்கமே சறுக்கலாக அமைந்தது. நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், கேப்டன் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார்.
பிரின்ஸ் யாதவ் மிரட்டல் பந்து வீச்சு
இதையடுத்து மிடில் ஆர்டரில் டிம் டேவிட் 17 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினாலும், லக்னோ அணியின் பந்துவீச்சை முறியடிக்க முடியவில்லை. குறிப்பாக லக்னோவின் பிரின்ஸ் யாதவ் அபாரமாகப் பந்துவீசி விராட் கோலி, ஜித்தேஷ் சர்மா உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளைச் வீழ்த்தி அசத்தினார்.
கடைசி வரை போராடிய ஆர்சிபி அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. 111 ரன்கள் குவித்த மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் ஹேசில்வுட் மற்றும் ராசிக் சலாம் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்தத் தோல்வி ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், ரஜத் படிதாரின் அதிரடி ஆட்டம் அந்த அணிக்குச் சிறு ஆறுதலாக அமைந்தது.
2026 ஐபிஎல் புள்ளிப்பட்டியல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இப்போட்டியில் தோற்றாலும் அதே மூன்றாவது இடத்தில் நிலைத்து வருகின்றனர். இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய அவர்கள் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளனர். மறுபக்கம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக 6 தோல்விக்கு பின்னர் தற்போது அதில் இருந்து மீண்டும் வெற்றியை அடைந்துள்ளனர். இது அவர்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும். புள்ளிப்பட்டியலில் அவர்கள் அதே 10 வது இடத்தில் நீடித்து வருகின்றனர். இவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பு பிராகாசமாக இல்லை. கிட்டத்தட்ட தொடரைவிட்டு வெளியேறிவிட்டனர். இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments