Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தை விஜய் ஆழ்வாரா?


1974 ஜூன் 22 அன்று பிறந்துள்ள விஜய்யின் அரசியல் பின்னணி முழுக்க முழுக்க ரசிகர் அடிப்படையிலான மக்கள் இயக்கத்திலிருந்து உருவானது. பதினைந்து ஆண்டுகள் மறைமுகப் பணியைத் தொடங்கி, 2024ல் கட்சி ஒன்றை ஆரம்பித்து, 2026ல் தனிப்பெரும் கட்சியாக தேர்தலில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் நீண்டகால ஆதிக்கத்துக்கு பெரும் சவாலாக விட்டார்.

ஆனால், இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு அவர் எடுக்கும் முன்னெடுப்புக்களின்போது, படும் பாட்டை நினைத்து கவலையாக உள்ளது; பதவியேற்பிற்காக ஆளுநரை சந்திக்க  எத்தனை முறைகள்தான் ஓடுவார்? 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பன தமிழக வெற்றிக் கழகம்  ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதால், த.வெ.க. பெரும்பான்மையை நிருபித்துவிடும் என்ற நிலையில் தமிழக ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி, 10ம் திகதி காலை முதலமைச்சராக விஜய்  பதவி ஏற்கவுள்ளதாக பரப்பப்பட்டு வருகின்ற செய்திகளில் உண்மைத் தன்மை இன்னுமே கேள்விக் குறியாகத்தான் உள்ளது.

விஜய் தனிப்பெரும் கட்சியாக தேர்தலில் வென்றபோதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான  பெரும்பான்மைப் பலம் இல்லாததால் அவர் சவால்களை எதிர் நோக்கி வருகின்றார்!

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி  தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து கொண்ட நிலையில், போதிய சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்ட தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவைப் பெற பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், ஒரு நிலையான ஆட்சியை அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் மிகவும் சிக்கலான கட்டத்தில்தான் உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய்  உடனடியாக ஏற்றுக்கொண்டமையானது  ஒரு பிரச்சினையாக உருவாகி அரசியல் நெருக்கடியின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்பட்டது. தமிழகத்தில் புதிய சக்தியாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம், நேரடியாக காங்கிரஸுடன் கைகோர்த்ததை மத்திய அரசு  சிக்கலான ஒன்றாகப் பார்ப்பதுபோல் தெரிகின்றது.

முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், தாங்கள் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தும் உள்ளதாகவும், ஸ்டாலின் அறிவுறுத்தினால் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், திமுக (62) அதிமு (53) இணைந்து இன்னும் மூன்று பேர்களின் ஆதரவைத் தேடிப் பெற்று ஆட்சியமைக்கலாம் என்ற தகவல்களும் ஊடகங்களில் பரவி வருகின்றன.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் மாற்றுக் கூட்டணி ஒன்று உருவாகி ஆட்சியமைக்குமேயானால், தனது 108  உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் தேர்தலை சந்திக்க விஜய் தயாராக உள்ளதாக ஊகங்கள் கசிந்து வருகின்றன.

பொறுத்திருந்து பார்ப்போம்!

செம்மைத்துளியான்

 


Post a Comment

0 Comments