Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-115


முதியவர் குறிப்பிட்டதுபோல்  எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித  அழிவிற்கும், குகையிலிருந்து குள்ளர்களால் திருடிச் செல்லப்பட்ட அந்தப் புராதன நூலின் நான்கு பக்கங்களுக்குமிடையில்  ஏதோவொரு சம்பந்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட இர்வின், முதியவர் விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்து கேட்பதற்கு ஆர்வமானான்!

“குழந்தாய், நானும் இப்போது வயது முதிர்ந்தவனாகி விட்டேன்! இதுவரைக்கும் என்னால் இக்கல்லடிவாரத் திலிருந்து வெளியாகி, அந்தக் குகையைக் கண்டுபிடித்துக் கொள்ள முடியாது போய்விட்டது! ஏதோ  எனது நல்லதிர்ஷ்டம் எனது அந்திம காலத்திலாவது புத்திசாலித் தனமான நீ என் தொடர்பில் வந்துள்ளாய்! எனது தந்தையார் தேடிவந்த அந்தக்குகை இந்தக் கல்லருகில்தான் எங்கோ இருக்க வேண்டும்!” என்று நம்பிக்கை பொதிந்த தொனியில்  அவர் கூறினார்.

அந்தக் குகை இர்வினுக்கு மிகவும் பரிச்சயமானது என்றும், ‘கிரீடி’யில் வாழ்ந்து வந்த அவரது தந்தை தேடிவந்த நூல், சில பக்கங்கள் களவாடப்பட்ட நிலையில், இப்போது தன்னிடம்தான் இருக்கின்றது என்பதையும் முதியவ ரிடத்தில் கூறினால், அவர் பெருமிதமடைவார் என்பதை யும்  இர்வின் உணர்ந்தபோதிலும், அந்த நூலின் நான்கு பக்கங்கள் காணாமற் போய்விட்ட செய்தியைக் குறிப்பிட்டால் அவர் வருத்தமடையக் கூடும் என்பதை உணர்ந்துகொண்ட அவன், தொடர்ந்தும் முதியவரின் கதையைக்  கேட்பதில் ஆர்வமானான்.

“குழந்தாய், அந்த நூல் இருக்கின்றதே, அதிலே நிறைய வைத்தியத் தகவல்கள் பொதிந்துள்ளனவாம். அக்காலத்தில் அதனை எழுதியவர் ஒரு வைத்திய அறிஞர்; அவர் ஏதோவொரு நாட்டில் “என்டிகோனிஷ்” என்னும் இடத்தில் வாழ்ந்தவர் என்பதையும் எனது தந்தை அறிந்து வைத்திருந்தார். அவர் இவற்றையெல்லாம் ‘திதிபாபா’  மூலம் அறிந்தார் என்பதும் எனக்குத் தெரியும்! அந்த நூலில் அதிகமான தகவல்கள் ‘நுண்ணுயிர்’ என்றும், மனிதர்களுக்குள் நோய்களை இல்லாமலாக்கவும், ஏற்படுத்தவும் முடியுமான  இன்னபல அரிய தகவல்களைக் கொண்டதான அந்த நூல் பற்றி எனது தந்தையும், அவரைத் தேடி அடிக்கடி எங்கள் இல்லம்  வந்துகொண்டிருந்த 'பாபா'வும் பேசிக்கொள்வதை நான் பலமுறைகளில் கேட்டிருக்கின்றேன். அதனை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற நப்பாசையில்தான் அவர் இந்த வனாந்திரத்துக்குள் வந்தார்!

அவரின் துரதிர்ஷ்டமோ எனது நல்லதிர்ஷ்டமோ யானறியேன். என்னையும் அவரது நூல்களையும் இழந்து அவர் போய்விட்டார்; நான் இந்தக் குழிக்குள் சிக்கித் தவிக்கின்றேன்!” என்று கூறிவிட்டு, சற்று நிதானமடைந்த முதியவர்,  தன் கதையை மேலும்  தொடரலானார்.

ஆரம்பத்திலிருந்தே முதியவரின்  பேச்சினைப் புரிந்தும், புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த செரோக்கியும் அவனது தந்தையும், போகப்போக   நிதானமிழந்த வர்களாயினர்!

அப்பொழுது, திடீரென அவர்களது காதுகளில் விழுந்த சிட்டுக்குருவிகளின்   அலறல் சத்தம் அவர்களது கவனத்தை வேறு பக்கம் ஈர்த்தது! 

அந்தச்சிட்டுக்குருவிகள் ஏதோவொரு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது என்பது மாத்திரம் அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது!

இரண்டு குருவிகளும் மரக்கிளையிலிருந்த 'கூட்டை' வட்டமிட்டவாறு சத்தமிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் சற்று நெருங்கிச் சென்று பார்த்தபோது, பிரச்சினைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டனர்!
ஒரு பாம்பு, குஞ்சுகள் இருக்கும்  கூட்டை நோக்கி மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள்!

(தொடரும்)

 


Post a Comment

0 Comments