
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தமது பேருந்துச் சேவைகளை திங்கட்கிழமை (08) அன்று முதல் கட்டுப்படுத்தவுள்ளதாகவும்; இதற்கமைய பேருந்துச் சேவைகள் 50 சதவீதம் வரை குறையும் என்றும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஞாயிற்றுக்கிழமை (07) அன்று தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (07) அன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே கெமுனு விஜேரத்ன இதனைத் குறிப்பிட்டார்.
பேருந்துச் சேவைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தமது சங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறிய விஜேரத்ன, ஏறத்தாழ 25 சதவீதமான பேருந்து இயக்கங்கள் சனிக்கிழமை (06) அன்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்றும் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாங்கள் கோரியிருந்த பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்குச் சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறாததன் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார். மேலும், இந்த மாதத்திற்குள் பேருந்துகளை இயக்குவதற்கு ஏதேனும் நிவாரணங்களை வழங்குவதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC) போக்குவரத்து அமைச்சும் தவறிவிட்டன என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
வருடாந்தக் கட்டணத் திருத்தமானது எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தின் சில நாட்களுக்குள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட விஜேரத்ன, வருடாந்தக் கட்டணத் திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
“அத்தியாவசியமான பயணக் காலங்களான முற்பகல் வேளை, மதிய வேளையில் பாடசாலைகள் நிறைவடையும் நேரம் மற்றும் பிற்பகலில் அலுவலகங்கள் நிறைவடையும் நேரம் ஆகியவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். உதாரணமாக, நான்கு தடவைகள் பயணித்த இடத்தில் மூன்று தடவைகள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். பயண எண்ணிக்கையைக் குறைக்கும் இந்தச் சூழ்நிலையால், பேருந்து இயக்கம் 50 சதவீதமாகக் குறையும்; இதற்கான பொறுப்பை அரசாங்கமே கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments