Ticker

6/recent/ticker-posts

’கோட்டாபயவுக்கு அறிவுரை வழங்கியதே சலேதான்’


தன்னை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கியது சலே (சுரேஷ் சலே) தான் என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மதுபாட்டிலுக்கும் சோற்றுப் பார்சலுக்கும் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்திற்கும் சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகளைப் பரப்பி, ராஜபக்சாக்களுக்கு முட்டுக்கொடுக்கும் நபர்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், தனக்கு நேர்ந்த அரசியல் பழிவாங்கல்களின் பின்னணியில் இருந்த உண்மைத் தலைமைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

தான் எவ்வித குற்றச்சாட்டுகளோ அல்லது முறையான நீதிமன்ற விசாரணைகளோ இன்றி, கடற்படைத் தலைமையகத்தில் சுமார் 8 மாதங்கள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பலகைகளால் அடைக்கப்பட்ட ஒரு சிறிய அறையிலேயே தான் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் விவரித்தார். 

சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் முகாம்களில் இருப்பவர்களின் அனுபவங்கள் என்ன என்பது குறித்த முழுமையான அறிவும் அனுபவமும் சலேவுக்கு உண்டு எனக் குறிப்பிட்ட அவர், சலே, கபில ஹெந்தவிதாரண போன்றவர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டே கோட்டாபய ராஜபக்ச தங்களை சிறையிலடைத்துப் பழிவாங்கினார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகள் தன்மீது மட்டுமன்றி, தனது குடும்பத்தினர் மீதும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டதாகக் கவலை வெளியிட்டுள்ள அவர், தான் கைது செய்யப்பட்ட தினமன்று, தனது மனைவியைக் காலை 4 மணி வரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். 

tamilmirror


 


Post a Comment

0 Comments