Ticker

6/recent/ticker-posts

உறுதியான வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம்


இலங்கையின் பொருளாதாரம் சாதகமான பாதையில் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அந்த வகையில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 2500.38 பில்லியன் ரூபா மொத்த அரச வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2027 ஆம் ஆண்டுக்கான நிதித் திட்டமிடல் வெளிப்படுத்தலை முன்வைத்து நிதித் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கடந்த வெள்ளியன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த உரையின் போது, ‘கடந்த மாதம் பணவீக்கம் 5.5 சதவீதமாகக் பேணப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும் பண அனுப்பல்கள் சுமார் 25 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் இறைவரித் திணைக்களம் 1096 பில்லியன் ரூபாவையும் சுங்கத் திணைக்களம் 1079 பில்லியன் ரூபாவையும் அடிப்படையில் வருவாயாக ஈட்டியுள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வெளியிட்ட தரவுகளில் 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 7.3 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயாக நாட்டுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 7.56 சதவீத வளர்ச்சியாகும்.

பேரண்ட பொருளாதாரத்தின் சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்ற போதிலும், நாடு சரியான திசையில் பயணிப்பது தெளிவாகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் வீழ்ச்சிக்கு உள்ளான பொருளாதாரத்தை நிலைபேறான முறையில் மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிபலன்களை நாடு அடைந்து கொள்ள ஆரம்பித்துள்ளது. அதனையே அண்மைக் காலப் பொருளாதாரத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

குறிப்பாக ஏற்றுமதிப் பொருளாதாரமும் சரியான தொலைநோக்குப் பார்வையுடன் நிர்வகிக்கப்படுகிறது. அது ஒரு கூட்டு முயற்சி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருட்கள் ஏற்றுமதியும் சேவை ஏற்றுமதியும் ஒன்றுக்கொன்று சமநிலையில் வளர்ச்சி பெற்று வருகின்றன. பொருட்கள் ஏற்றுமதி வருவாய் 7.63 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ள அதேநேரம் சேவை ஏற்றுமதி 7.31 சதவீதம் முன்னேற்றமடைந்திருக்கிறது.

பொருட்கள் ஏற்றுமதி 18.25 சதவீதமும், சேவை ஏற்றுமதி 18.67 சதவீதமும் கடந்த மே மாதம் அதிகரித்து காணப்பட்டது. இது வெளிநாட்டு வர்த்தகச் சூழலில் நிலவும் பாதகமானதும் நிச்சயமற்றதுமான நிலைமைகளுக்கு மத்தியிலும், இலங்கை ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் தங்களது போட்டித்திறனையும் நிலைத்தன்மையையும் தக்கவைத்துக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இது உண்மையில் சாதகமான முன்னேற்றமாகும்.

பொருளாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட தீர்க்கப்படாத கட்டமைப்பு நெருக்கடிகளும், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் சிக்கல்களும், உள்நாட்டு வரிச்சுமை மற்றும் அதிக உற்பத்திச் செலவுகள் போன்ற பல சவால்களும் இன்னும் நாட்டில் காணப்படுகின்றன. இருந்தும் உலகளாவிய ரீதியில் ஏற்படும் பாதகமான ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உறுதியுடன் முன்னேற்றமடைந்துவரும் பொருளாதாரம் தனித்துவமான திறனை தெளிவாகப் பிரதிபலிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் உறுதியான பாதையில் முன்னேற்றமடைந்து கொண்டிருப்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இந்த சூழலில், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் சில எதிர்க்கட்சிகள், மக்களிடையே நிலவும் இயல்பான பொருளாதாரச் சிரமங்களையும் அழுத்தத்தையும் தங்கள் அற்ப அரசியல் நலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றன. பொருளாதார ரீதியாக நாடு மீண்டுவரும் தருணத்தில் நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

பொருளாதார முன்னேற்றத்தின் சாதகமான அம்சங்களைப் புறக்கணித்து, சமூகத்தில் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியானது, நாட்டை இருண்ட காலத்திற்குள் தள்ளிவிடுவதற்கான எத்தனிப்பாகவே தெரிகிறது. அதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் துணை போகமாட்டார்கள். அதன் காரணத்தினால் தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கடந்து, பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது. இந்த பாதையை வலுப்படுத்துவதன் மூலமே இந்நாடு முழுமையான பொருளாதார முன்னேற்றத்தையும் ஸ்திரத்தன்மையையும் அடைய முடியும் எனலாம்.

thinakaran


 


Post a Comment

0 Comments