Ticker

6/recent/ticker-posts

நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவி : அடி தாங்க முடியாமல் கதறிய கணவன்


மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்   முன்பாகத் தம்பதியருக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த தேவ சௌராசியா மற்றும் அவரது மனைவி சுமேன் சௌராசியா ஆகியோர் தங்களது தனிப்பட்ட வேலை காரணமாகச் சத்தர்பூர் நகருக்கு வந்திருந்தனர். அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென வாய்மொழித் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுமேன், கணவரின் கைகளைக் கெட்டியாகப் பிடித்தபடி நடுரோட்டிலேயே அவரது கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் மேலும் நீடித்தது. இந்தத் தம்பதியரின் சண்டையின்போது, அவர்களது பச்சிளங் குழந்தையும் அருகிலேயே நின்று அழுதுகொண்டிருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

  தம்பதியர் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டபோது, அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்த போதிலும், யாரும் உடனடியாகத் தலையிட்டு அவர்களைச் சமாதானப்படுத்த முன்வரவில்லை. மாறாக, அங்கிருந்த பலர் தங்களது கைபேசிகளில்   இச்சம்பவத்தைக் காட்சிகளாகப் பதிவு செய்வதிலேயே ஆர்வம் காட்டினர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகின்றன.

அப்போது பாதிக்கப்பட்ட கணவர் தேவ சௌராசியா, சுற்றியிருந்த பொதுமக்களைப் பார்த்து, “ஒரு பெண்ணாக இருந்து இவர் என்னை அடிக்கிறார். இதையே நான் திருப்பி ஏதாவது செய்திருந்தால், இந்நேரம் கூடி நிற்கும் இந்தச் சமூகம் என்னையே குற்றவாளியாகச் சித்தரித்திருக்கும்!” என்று வேதனையுடன் கத்தியுள்ளார்.

  பிரதான வீதியில் ஏற்பட்ட இந்த மோதலால் அந்தப் பகுதியில் சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்பின், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துப் பொலிஸார், இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து இதுவரை இரு தரப்பிலிருந்தும் பொலிஸ் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை எனப் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilmirror


 


Post a Comment

0 Comments