Ticker

6/recent/ticker-posts

தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்: ஆந்திராவை உலுக்கிய சோகம்!


பிதாபுரம், காக்கிநாடா: ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், மதிய உணவின் போது, குடிக்கத் தண்ணீர் கொண்டு வரத் தாமதம் செய்த தாயின் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் அவரை கொடூரமாகத் தாக்கிய நிலையில், அந்த தாய் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருந்த குற்றவாளி ராஜபாபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிதாபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் மண்டலத்திற்குட்பட்ட சித்ராடா இ.பி.சி காலனியைச் சேர்ந்தவர் பெண்டா நாகமணி (45). இவருக்கு ராஜபாபு என்ற மகன் உள்ளார். கடந்த ஜூன் 9-ஆம் தேதி, நாகமணி தனது மகனுக்கு மதிய உணவு பரிமாறியுள்ளார். சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜபாபு, பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீர் எடுத்து வருமாறு தாயிடம் கேட்டுள்ளார்.

அவரது தாய் தண்ணீர் கொண்டு வர சில நிமிடங்கள் தாமதம் ஆகியுள்ளது. இது ராஜபாபுவுக்கு கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த ராஜபாபு, சத்தமிட்டபடி பிரிட்ஜை நோக்கி வேகமாக ஓடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரிட்ஜ் கதவின் மீது பலமாக மோதியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது கோபம் இன்னும் அதிகமாகியுள்ளது. கோவத்தின் உச்சிக்கு சென்ற அவர், தனக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்த தாய் நாகமணி மீது பாய்ந்துள்ளார். கண்மூடித்தனமாகத் தாயைத் தாக்கியதோடு மட்டுமின்றி, அங்குள்ள பூஜை அறையில் இருந்த மர மேஜையின் மீது நாகமணியின் தலையை ஓங்கி அடித்துள்ளார். இதில் நாகமணி தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் தரையில் சுருண்டு விழுந்தார்.

காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் அனுமதி

சம்பவம் நடந்த சில நிமிடங்களில் நாகமணியின் கணவர் திருமுர்துலு மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த நாகமணியை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாகமணியை உடனடியாக மீட்டு காக்கிநாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு (GGH) கொண்டு சென்றனர்.

மகனின் கோவத்தால் பிரிந்த தாயின் உயிர்

மகன் நடத்திய கொடிய தாக்குதலால் பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிதாபுரம் காவல்துறை விசாரணை

இச்சம்பவம் குறித்து பிதாபுரம் பகுதி இன்ஸ்பெக்டர் ஜி. ஸ்ரீநிவாஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளி ராஜபாபுவை, திங்கட்கிழமை அன்று சித்ராடா பாலம் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 105-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் கொண்டு வர தாமதம் ஆன ஒரு சிறிய விஷயத்துக்காக, ஒரு மகன் தன் தாயையே உயிர் போகும் அளவுக்கு அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

zeenews


 


Post a Comment

0 Comments