Ticker

6/recent/ticker-posts

12,000 பேர் உயிரிழந்த சோகம்... நேபாளத்தில் இதுவரை மறக்க முடியாத பேரிழப்புகள்


உலகில் அதிகளவில் இயற்கைச் சீற்றங்கள் நிகழும் நாடுகளுள் ஒன்றாக உள்ளது நேபாளம். அதற்கு முக்கியமான காரணம், அந்நாட்டின் புவியியல் அமைப்பு, நில அமைப்பு மற்றும் பருவநிலை. நேபாளம் இந்தியத் தட்டு மற்றும் யூரேசியத் தட்டு மோதும் பகுதியில் அமைந்துள்ளதால் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம்.

அதேபோல உயரமான, செங்குத்தான மலைச்சரிவுகள் இருப்பதால் நிலச்சரிவு மற்றும் பாறைச் சரிவுகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி வெள்ளம், பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் பனிச்சரிவுகள் போன்றவையும் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் நேபாளத்தில் இயற்கைச் சீற்றங்களால் பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, 1934ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோலில் 8.3 என கணிக்கப்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 12,000 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இவற்றில் சரிபாதியினர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். ஏராளமான கட்டடங்கள் தகர்ந்ததில் ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்தனர்.

அதேபோல 1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று, நேபாள-இந்திய எல்லைக்கு அருகிலுள்ள உதயபூர் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதில் தென்கிழக்கு நேபாளம் முழுவதும் உள்ள ஏராளமான கிராமங்கள் கடுமையாக சேதமடைந்தன.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கும்பு பனிப்பாறையின் ஒரு பெரும்பகுதி சரிந்ததால், எவரெஸ்ட் சிகரத்திற்குக் கீழே இருந்த முகாம் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எவரெஸ்ட்டில் ஏறுவோர்க்கு உதவும் மலையேற்ற வழிகாட்டிகள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அடுத்த ஆண்டான 2015 ஏப்ரல் 25 மற்றும் மே 12இல் மத்திய நேபாளத்தில் உள்ள கோர்கா மாவட்டத்திற்கு அருகில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கங்களிலும் சேர்த்து சுமார் 9000 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்தனர். கடந்த சுமார் பத்தாண்டுகளில் அந்நாட்டில் நிகழ்ந்த மிகவும் மோசமான பேரழிவாக இந்த நிலநடுக்கம் அமைந்தது.

இந்த வரிசையில் 2019 மற்றும் 2020இல் ஏற்பட்ட பருவமழையும் நேபாளத்தைவிட்டு வைக்கவில்லை. 2019 ஜூலை மாதம், மத்திய மற்றும் கிழக்கு நேபாளம் முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு 78 பேர் உயிரிழந்தனர். 2020-ஆம் ஆண்டு பருவமழையால் 196 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் விழுங்கியது. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தத்தளித்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் பெய்த கனமழையால், கிழக்கு நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் இதில் உயிரிழந்தனர். நேபாள ராணுவம் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. அதேபோல கடந்த நவம்பர் 4ஆம் தேதி, டோலகாவில் உள்ள யாலுங் ரி மலையில் இருந்த ஒரு அடிவார முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

news18


 


Post a Comment

0 Comments