
அன்னியர் சிலரின் வருகை அன்று புரோகோனிஷ் கிராமத்தை அல்லோல கல்லோலச் செய்துவிட்டது!
செரோக்கியும், ரெங்க்மாவும் இர்வினின் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிருந்தபோது, விழாவில் பேசுவதற்கு செரோக்கிக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவன் தனது சமூகத்தினரை கல்வித்துறையின்பால் இட்டுச் செல்ல வழிசெய்யும்படியான ஒரு கோரிக்கையை, கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் முன்வைத் திருந்தான்.
பட்டமளிப்பின்போது வனவாசி இளைஞன் ஒருவனால்
விடுக்கப்பட்ட கோரிக்கை, அந்நாட்களில் அந்த நாட்டுப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததோடு, பல்கலைக்கழகம் இதுபற்றிய சிபார்சினை எழுத்துமூலமாக அந்நாட்டின் கல்வித்துறைக்கு விடுத்திருந்தது. அரசகல்வித்துறை அங்கீகாரம் முறைப்படி கிடைக்கப் பெற்றதும், பல்கலைக்கழகம் இதற்கான செயற்குழு ஒன்றை நியமித்து, செரோக்கியின் கோரிக்கையை செயற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது!
அதற்கான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கிலேயே அன்று பல்கலைக் கழக மட்டத்திலான தூதுக் குழு ‘புரோகோனிஷ்’ கிராமத்திற்கு வந்தது!
அன்னியரை நெருங்க விடாதிருந்த, அந்த சமூகத்தின் மத்தியில் இது சலசலப்பை ஏற்படுத்திவிட்டபோதிலும், இர்வினும், செரோக்கியும் ஒருசேர வனவாசிகளைச் சரிப்படுத்துவதில் எடுத்துக் கொண்ட பிராயச்சித்தம், அவர்களை அமைதியுறச் செய்ததால், வருகை தந்தோர் முறைப்படி வரவேற்கப்பட்டனர்!
தூதுக்குழுவின் செயற்திட்டம், இர்வின், செரோக்கி இருவர் மூலமாகவும் வனவாசிகளிடத்தில் முன்வைக்கப்பட்டது.
வனவாசிகளிடத்தில் கல்வி கற்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், அதற்கான கொட்டிலொன்றை நிர்மாணிப்பதற்கு பல்கலைக்கழக செயற்குழு திட்டவரைபு ஒன்றினைத் தயாரித்துள்ளமை பற்றிய தகவல் அம்மக்களிடம் தெரிவிக்கப்பட்டது! இதுபற்றி
அவர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்காக கால அவகாசமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
புரோகோனிஷ் கிராமத்திலிருந்து மரவேரடிக்குப் பிரிந்து செல்லும் முச்சந்திப் பிரதேசம் கொட்டில் நிர்மாணிப்பதற்கான உசிதமான இடமாக இருப்பதாக தூதுக்குழு குறிப்பிட்ட பரிந்துரையை இர்வின், செரோக்கியிடம் தெரிவித்தான்! இதற்கான அங்கீகாரத்தை மூத்த வனவாசிகளிடம் பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை கூறிவிட்டு, இர்வின் தூதுக்குழுவினரோடு, “மனாஸ்” நகர் நோக்கிச்சென்றான்.
செரோக்கிக்கு இதுவொரு புதுத்தொல்லையாக இருந்தபோதிலும், தனது சமூகத்தின் மேம்பாட்டை நினைத்து, ஆறுதல் கொண்டவனாக அடுத்தகட்ட செயற்திட்டத்தை முன்னோக்கி நகரலானான்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments