Ticker

6/recent/ticker-posts

கொதிக்கும் பசிபிக் பெருங்கடல்.. வினாடிக்கு 12 ஹிரோஷிமா அணுகுண்டுகள்.. உலகை மிரட்டும் 'எல் நினோ'!


எல் நினோ-வின் ரகசியங்கள் இன்னமும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும் அது பசிபிக் பெருங்கடலில் நடக்கும் சாதாரண நிகழ்வாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது

புவி வெப்பமடைதல் காரணமாக வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வளிமண்டலத்தில் உருவாகும் இந்த அதிகப்படியான வெப்பத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவை நமது பெருங்கடல்களால்தான் உறிஞ்சப்படுகின்றன.  (படம் : நாசா)

2025-ஆம் ஆண்டில் மட்டும், கடல்கள் உள்வாங்கிய வெப்பத்தின் அளவானது, ஒவ்வொரு வினாடியும் 12 ஹிரோஷிமா அணுகுண்டுகள் வெடிப்பதால் வெளியாகும் வெப்ப ஆற்றலுக்குச் சமம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலகட்டங்களில், பெருங்கடல்களில் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 19.6°C ஆக இருந்தது. தற்போது இது 21°C ஐ நெருங்கிவிட்டது. புவியின் மொத்த பெருங்கடல் பரப்பு 361 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும். இப்படி,  உலகின் கண்டங்களை சூழ்ந்து தொடர்ச்சியான நீர்பரப்பை வெப்பமாக்க, கற்பனைக்கும் எட்டாத அளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த வெப்ப ஆற்றல்தான் 'எல் நினோ' போன்ற வானிலை நிகழ்வுகளுக்கு   அடிப்படை உந்துசக்தியாக மாறுகிறது. 

பெருங்கடல்களால் உள்வாங்கப்படும் இந்த மாபெரும் வெப்ப ஆற்றல், மீண்டும் வளிமண்டலத்திற்கே திரும்பும் ஒரு இயற்கை சுழற்சியே 'எல் நினோ' (El Niño) எனப்படுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில், கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாகத் தீவிரமாக வெப்பமடைவதையே வானிலையாளர்கள் இவ்வாறு வரையறுக்கின்றனர். இந்த அசாதாரண வானிலை நிகழ்வின் போது, கடலின் ஆழத்தில் நீண்டகாலமாகச் சேகரமான மாபெரும் வெப்பம் அதிவேகமாக மேற்பரப்பிற்கு உந்தப்பட்டு, பெருமளவில் வளிமண்டலத்தில் கலக்கிறது.

இவ்வாறு கடலிலிருந்து பெருமளவு வெப்பம் வெளியேறுவதால், உலகளாவிய காற்று வீசும் திசைகளிலும், மழைப்பொழிவிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வறட்சியும், பசிபிக் கடலின் கிழக்கு கடையோரேப் பகுதிகளில் குறிப்பாக பெரு, பிரேசில், மத்திய அமெரிக்கா முதலான பகுதிகளில் கடும் மழையும், சூறாவளி நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் ஏற்படுகின்றன.

மனித வரலாற்றின் ஆகப்பெரும் பேரழிவாகக் கருதப்படும் ஹிரோஷிமா அணுவெடிப்பை விட, ஒவ்வொரு நொடியும் 12 மடங்கு அதிகமான வெப்ப ஆற்றல் நம் பெருங்கடல்களில் தொடர்ந்து சேகரமாய்க் கொண்டே இருக்கிறது. கடல் இந்த வெப்பத்தை தன்னகத்தே வைத்துக் கொள்ள முடியாமல் எல் நினோவாக, வறட்சியாக, பெருவெள்ளமாக, சூறாவளியாக நம்மை நோக்கித் திரும்பி அனுப்பி வைக்கின்றன. இது, இயற்கையின் சுழற்சியாகும்.

எல் நினோ-வின் ரகசியங்கள் இன்னமும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும் அது பசிபிக் பெருங்கடலில் நடக்கும் சாதாரண நிகழ்வாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. காடழிப்பு, மனித செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் கரியமில வாயு, விவசாய பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் வளிமண்டலம் வெப்பமாகிறது. கடலின் மூலம் இந்த வெப்பம் மீண்டும் மனித நிலப்பரப்பை நோக்கி திரும்புகின்றன.

news18


 


Post a Comment

0 Comments