
சிரித்துக்கொண்டே மூத்தவள் செல்ல, சின்னவளைக் கலாய்த்துக்கொண்டே அவளது கணவன் வேலைக்குப் போகத் தயாரானான்.
அவர்களது மகள் மட்டும்,
"சடையைப் போட்டுவிடுங்கம்மா..." என்று சிணுங்கினாள்.
"இருடி... நச்சரிக்காமல் முகம் கழுவி, பல் தேய்த்துவிட்டு வருகிறேன்," என்று கூறிக்கொண்டே சின்னவள் கேணி இருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.
நடந்துகொண்டே இருந்தபோதும், அவளது மனதில் விடை தேடியது ஒரு கேள்வி.
அக்கா ஏன் அறைக்குள் வந்தார்?
இவர் ஏன் கேலி செய்தார்?
மகள் 'தண்ணீர்' என்று நான் கேட்டேனா என்று என்னைப் பார்த்துக் கேட்டாளே?
என்று சிந்தித்துக்கொண்டே பல் தேய்த்தாள்.
அப்போதுதான் நெற்றிப் பொட்டில் நினைவு வந்து நின்றது.
"ஆஹா! நாம் கனவில்தான் கதை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறோம். கனவில் தண்ணீர் கேட்கும்போது நான் கூறிய பதில் என்னை அறியாமலே வெளியே வந்திருக்கிறது."
"அடடே! சும்மாவே கிண்டல் பண்ணத் தெரியாத மனிசன். இன்று அவ்வளவுதான்!" என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே முகம் கழுவினாள்.
திடீரென இன்னொரு எண்ணம் தோன்றியது.
"அட! நாம் கனவு கண்டது போலவே கதையை இன்று அத்தை சொன்னாள். இவ்வளவு சந்தோஷமாக இருக்கும்
என்று எண்ணிக்கொண்டே வந்து மகளுக்குச் சடை போட்டாள்.
வேலை அதிகரித்ததும், அவளது கவனம் வேறு பக்கம் திரும்பியது.
சற்று நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிய, மூத்தவள் அவளருகே வந்தாள்.
"ஏன்டி, என்னாச்சுடி உனக்கு? இன்று எழுந்திட தாமதம். தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறாய். அப்பப்பா... கொஞ்ச நேரம் என் நெஞ்சிலே தண்ணீரே இல்லை. நீ என்னவென்றால், 'போய் எடுத்துக் குடி தண்ணீரை' என்று பிள்ளையை விரட்டுகிறாய்!" என்று கூறி சின்னவளின் முகத்தைப் பார்த்தாள்.
அவள் சிரித்துக்கொண்டே,
"சாதாரணமா சொன்னால் ஒன்றுமில்லை அக்கா. ஒரு கனவு கண்டேன். கதை நான் நினைத்தது போல முடிவதாக கனவு கண்டேன். கனவில் பேசியதை சத்தமாகப் பேசியிருக்கிறேன்," என்றாள்.
மூத்தவள் அவளது கன்னத்தைக் கிள்ளி சிரித்தாள்.
அவர்களது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாட்டி.
"அடியே மருமக்காளே! விருந்து சமையலுக்கான ஏற்பாடு பண்ணுங்கடி. கொல்லையில் நிற்கும் வாழைப்பூவும், கூண்டுக்குள் இருக்கும் விடைக்கோழியும் அறுத்து, தோட்டத்துக் காய்களோடு சாம்பார் வையுங்கள். ஆறு ஏழு காய்கறி, இனிப்பு வகை எல்லாம் தயார் பண்ணுங்க. பன்னிரண்டு மணிக்கே சாப்பாடு தயாராக இருக்கணும்!" என்றார் கிழவி.
மூத்தவள் இளையவளைப் பார்த்தாள்.
இளையவள்,
"யாரு வராங்க அக்கா?" என்றாள்.
இவள் தோளை உயர்த்தி,
"தெரியாதே! போய் அத்தையிடமே கேட்டுப் பார்," என்றாள்.
"அடியாத்தி! ஆளை விடுங்க!" என்றாள் இளையவள்.
இருவரும் சிரித்துக்கொண்டே சமையலைத் தொடங்கினர்.
இப்போது எல்லாம் மறந்து போயிருந்தது.
'யார் வருவது?' என்ற கேள்வி மட்டுமே இருவரது மனதிலும் நின்றிருந்தது...
(தொடரும்)
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




1 Comments
நன்றி அண்ணா
ReplyDelete