
ஐரோப்பிய நாடுகளில் உள்ள வீடுகள், பள்ளிகள், பண்ணைகள், தொழிற்சாலைகள, மருத்துவமனைகள் என அனைத்து உள்கட்டமைப்பும் குளிர்காலப் பனியைத் தாங்கி, வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தொழில்நுட்பத்துடனேயே கட்டப்பட்டவை ஆகும்
வெப்ப அலை காரணமாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தற்போது மக்கள் ஏசி-களை வாங்குவதற்கு நீண்ட வரிசைகளில் அலைமோதி வருகின்றனர். சூப்பர் எல்-நினோ, பெருங்கடல் வெப்பம் காரணமாக தற்போது ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவிலான வெப்ப அலை வீசி வருகிறது. கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல் நூற்றுக்கணக்கான மக்கள் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஜூன் 21 முதல் தற்போது வரை, ஐரோப்பாவில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இந்த கடும் வெப்பத்தினால் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அசாதாரணச் சூழல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும், வாழ்வாதாரத்திலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய கண்டம், உலகின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற அமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 0.56°C என்ற விகிதத்தில்) வெப்பமடைந்து வருகிறது. தமிழ் சினிமா பாடல் காட்சிகளில் மிகக் குளிர்ந்த பிரதேசமாகக் காட்டப்படும் ஐரோப்பா, தற்போது அதிவேகமாக வெப்பமடைவதற்கு மூன்று முக்கியக் காரணங்களை அறிவியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முதலாவதாக ஆர்க்டிக் பகுதிக்கு மிக அருகில் இருப்பது. உலகிலேயே மிக வேகமாக உருகி வரும் துருவப் பகுதியான ஆர்க்டிக்கிற்கு மிக அருகில் ஐரோப்பா அமைந்துள்ளது. ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகும்போது, சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் வெள்ளை நிறப் பரப்பு (Albedo Effect) குறைந்து, இருண்ட கடல் பரப்பு வெளிப்படுகிறது. இந்த இருண்ட பரப்பு அதிகப்படியான சூரிய வெப்பத்தை உள்வாங்கி கொள்வதால், ஐரோப்பாவும் மிக வேகமாக வெப்பமடைகிறது.
இரண்டாவதாக, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலக் காற்றுச் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். ஐரோப்பாவிற்கு மேல் உருவாகியுள்ள 'வெப்பக் குவிமாடம்' ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருந்து வரும் வெப்பக் காற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு மேல் சிறைப்பிடித்து வைக்கிறது. இதன் காரணமாக, வாரக்கணக்கில் கடுமையான வெப்பம் அங்கு நீடிக்கிறது.
மூன்றாவதாக, சுத்தமான காற்று. பல பத்தாண்டுகளாக தங்களின் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காற்றில் கலக்கும் சல்பர் போன்ற ஏரோசால் துகள்களைக் கடுமையான சட்டங்கள் மூலம் வெகுவாகக் குறைத்துள்ளன.காற்றில் இருக்கும் இந்த மாசுத் துகள்கள், இதற்கு முன்பு சூரிய கதிர்களைப் பிரதிபலித்து விண்ணிற்கு திருப்பி அனுப்பின. தற்போது காற்று தூய்மையாக்கப்பட்டுள்ளதால், சூரிய கதிர்கள் நேரடியாகவும் முழுமையாகவும் நிலப்பரப்பைத் தாக்குகின்றன. இதுவும் வெப்பம் அதிகரிப்பதற்குக் கூடுதல் காரணமாக மாறியுள்ளது.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள வீடுகள், பள்ளிகள், பண்ணைகள், தொழிற்சாலைகள, மருத்துவமனைகள் என அனைத்து உள்கட்டமைப்பும் குளிர்காலப் பனியைத் தாங்கி, வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தொழில்நுட்பத்துடனேயே கட்டப்பட்டவை ஆகும். அங்கு ஜன்னல்களும் சுவர்களும் உள்புற வெப்பம் வெளியேறாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போதைய சூழலில் இந்த உறைவிடங்களே மக்களைக் கொல்லும் வெப்பக் கூடாரங்களாக மாறியுள்ளன. இதன் காரணமாகவே, இதுவரை ஏசியே தேவைப்படாத பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கூட இன்று மக்கள் ஏசி வாங்குவதற்கு நீண்ட வரிசைகளில் அலைமோதி வருகின்றனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments