
கொழும்பு மாநகர சபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், கற்பனை செய்து பார்க்கவும் முடியாத அளவிற்கு பாரிய அளவிலான ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அது குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தெரியவந்துள்ளது.
அது குறித்து மேலும் விசாரிப்பதற்காக ஆணைக்குழுவின் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி நேற்றைய தினத்துடன் (29) நிறைவடையவிருந்த ஆணைக்குழுவின் காலம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபைக்குள் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் நம்பிக்கை துரோகம், அதிகாரம், அரசாங்க வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை அநாவசியமாகப் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்புகள், நியமனங்கள் மற்றும் கொள்முதல் வழிகாட்டல்களை மீறுதல், அசையும் அல்லது அசையா சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள், முறையான நடைமுறைகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள், மேற்கூறிய செயல்களின் காரணமாக அரசாங்க சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து கண்டறிவதற்காக இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னாள் மேயர்களை அழைத்து அவர்களிடமும் விசாரணை நடத்த ஆணைக்குழு தயாராக உள்ளது. அதன்படி அடுத்த வாரத்தில் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளார்.
அது மாநகர சபைக்குள் அவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றுள்ள சில சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக என்று ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவித்தன.
சனநெருக்கடி மிக்க மற்றும் வர்த்தகத் தலங்களில் தமது அலுவலகங்கள் இருப்பதாக போலித் தகவல்களை முன்வைத்து, அவ்விடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை ஒதுக்கிக்கொண்டு, அந்த இடங்களை அதிக விலைகளுக்கு விற்பனை செய்து கடந்த ஆட்சிக் காலங்களில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களால் செய்யப்பட்ட பாரிய அளவிலான மோசடி குறித்தும் தற்போது ஆணைக்குழு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.
தமது அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக எனக் கூறி சபைக்கு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஒதுக்கிக்கொள்ளும் இடப்பரப்பை உறுப்பினர்கள் ஆண்டுதோறும் விற்பனை செய்திருப்பது 10 இலட்சம் ரூபா முதல் அதற்கும் அதிகமான தொகைகளுக்கு என்றும், சில உறுப்பினர்கள் 30 இலட்சம் ரூபா முதல் 40 இலட்சம் ரூபா வரையிலான அதிக விலைகளுக்கு அந்த வாகன நிறுத்த இடங்களை விற்பனை செய்துள்ளதாகவும் ஆணைக்குழுவிற்கு தகவல்கள் வெளிப்பட்டு வருகின்றன. கொழும்பு மாநகர சபையின் 119 உறுப்பினர்களில் 108 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமது அலுவலகங்கள் இருப்பதாகக் கூறி முகவரிகள் வழங்கப்பட்டுள்ள இடங்களில் இருப்பது வர்த்தக நிலையங்கள் என்றும், அந்த வர்த்தக நிலையங்கள் கூட கொழும்பு நகரின் மிகவும் சனநெருக்கடியான மற்றும் பொதுமக்கள் அதிகமாக வருகை தரும் வர்த்தக இடங்கள் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு மாநகர சபை உறுப்பினரின் அலுவலகம் ஒன்று தமது வர்த்தக நிலையங்களில் இருந்திருக்கவில்லை என்பது அந்த வர்த்தக நிலையங்களில் நடத்திய தேடுதலின் போதும் தெளிவாகியுள்ளது. இடம்பெற்றிருப்பது உறுப்பினர்களால் பணத்திற்காக அந்த வர்த்தக நிலையங்களுக்கு வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை சட்டவிரோதமான முறையில் ஒதுக்கித் கொடுத்ததே என்பதும் தெரியவந்துள்ளது. அது குறித்து எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அழைத்து விசாரிப்பதற்கு ஆணைக்குழு தயாராக உள்ளது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி பியசேன ரணசிங்க அவர்கள் இந்த ஆணைக்குழுவின் தலைவராகக் கடமையாற்றுகிறார்.
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இலங்கை கணக்காளர் சேவையின் (தரம் 1) ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர்கள் கடமையாற்றுகின்றனர்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments