Ticker

6/recent/ticker-posts

$51 மில்லியனைச் சுருட்டிய மோசடிக் கும்பல் - பண உதவி செய்த ஆடவருக்கு 4 ஆண்டுச் சிறை


மோசடிக் கும்பல் ஒன்றுக்குப் பணம் கொடுத்து உதவிய சிங்கப்பூர் ஆடவருக்கு 4 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

50 வயதாகும் ரோன்னி லோவிற்கு (Ronnie Low) 52,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அதைக் கட்டத் தவறினால் மேலும் 5 மாதச் சிறைத் தண்டனையை அவர் எதிர்நோக்கக்கூடும்.

குறுஞ்செய்திக் கணக்குகளைச் சட்ட விரோதமாக விற்ற ஒரு கும்பலுக்கு 40,000 வெள்ளி பணம் தந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதற்காக அவர் கும்பலிடமிருந்து சுமார் 92,600 வெள்ளியைப் பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கும்பல் இயங்கி வந்த இடத்தில் நடைபெற்ற சோதனையில் 24,000 சிம் (SIM) அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவை கிட்டத்தட்ட 2,400 மோசடிப் புகார்களுடன் சம்பந்தப்பட்டிருந்தன என்று காவல்துறை குறிப்பிட்டது.

மோசடிக் கும்பல் நவம்பர் 2023 முதல் மே 2024 வரை சுமார் 887,400 வெள்ளி லாபம் ஈட்டியது என்று விசாரணையில் தெரியவந்தது.

மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் இழந்த மொத்தத் தொகை 51 மில்லியன் வெள்ளி.

முதலீட்டு மோசடிகளில் மட்டும் 24 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

Mediacorp Seithi


 


Post a Comment

0 Comments