Ticker

6/recent/ticker-posts

சாகாவரம் தேடி கோடிகளை வாரி இறைத்த, பிரபல தொழிலதிபருக்கு அரிய வகை நோய்! என்ன நடந்தது?


சாகாவரம் தேடி, ஒவ்வொரு மாதம் சுமார் 1 கோடிக்கும் மேல் வாரி இறைத்த பிரபல தொழிலதிபருக்கு, தற்போது அதுவே சோதனையாகி உள்ளது. ஆம், அவரது உடலே எதிராகி உள்ளது. என்ன நடந்தது என்ற முழுமையான விவரத்தை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

என்றும் இளமையாக இருக்க வேண்டும், சாகாவரம் வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கும். இதை அறிவியல் துணைகொண்டு சாத்தியமாக்க முயன்றார் ஒரு அமெரிக்கத் தொழில் அதிபர் ஒருவர். ஆனால் இன்று அவர் உடலே அவருக்கு எதிராக மாறியுள்ளது. என்ன நடந்ததென்ற அதிர்ச்சி விவரத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம் வாங்க...

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபரான பிரையன் ஜான்சன்-தான் அது. பிறந்த தேதியின் அடிப்படையில் இவரின் வயது 48. ஆனால் அவரின் உடல் உறுப்புகளின் வயதோ வேறு. அதாவது அவரின் தோலின் ஆரோக்கியத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டால் அவரின் வயது 28 – 30 என்றுதான் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம், அவர் உட்கொண்டு வந்த மருந்து மற்றும் மாத்திரைகள்தான். என்றும் 16 போல வாழ வேண்டும் என்பதற்காக, தினமும் டஜன் கணக்கான மாத்திரைகள்/சப்ளிமெண்ட்ஸ் (111 மாத்திரைகள் வரை சாப்பிட்டார் என சொல்லப்படுகிறது) உட்கொள்வது, கடுமையான தாவர அடிப்படையிலான (சைவ) உணவு முறை, துல்லியமான உடற்பயிற்சி மற்றும் தூக்க நேரத்தைப் பின்பற்றி வந்தார் பிரையன்.

மட்டுமன்றி தனது இதயத்தின் உயிரியல் வயது முதல் இரவு நேர உடல் மாற்றங்கள் வரை அனைத்தையும் மருத்துவக் குழுவின் உதவியோடு தீவிரமாகக் கண்காணித்து வந்தார். ஒருகட்டத்தில் தனது உடலின் வயதைக் குறைக்க, தனது மகனின் ரத்த பிளாஸ்மாவை தனக்குச் செலுத்திக் கொள்ளும் சிகிச்சையைச் செய்தார். ஆனால், பலன்கள் இல்லாததால் அதை நிறுத்திக்கொண்டார்.

மருந்து மாத்திரைகள் மட்டுமே இல்லை. வாழ்வியல் மாற்றங்கள் பலவும் செய்து கொண்டார் பிரையன். அதன்படி காலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பிரையன், காலை உணவை 6 மணிக்கெல்லாம் எடுத்துக்கொள்வார். அசைவ உணவைத் தவிர்த்துவிட்டு, முற்றிலும் காய்கறி பழங்களை மட்டுமே உட்கொள்வார். உணவைப் பொறுத்தவரைத் தினசரி 1977 கலோரி சத்துக்களைக் கொண்ட உணவை மட்டுமே எடுத்துக்கொள்வார். ஒரு கலோரி கூடுதலாகவோ, குறைவாகவோ எடுக்கக்கூடாது. கட்டாயம் உடற்பயிற்சி என்பதும் இவரின் ‘என்றும் இளமை’ முறையில் ஒன்றாக இருந்தது. எனவே உணவு, உறக்கம், உடற்பயிற்சி என கட்டுக்கோப்பாக இருந்தார். இத்துடன்  பயோ-ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் மூலம் 160 வயது வரை (2140 வரை) வாழ இலக்கு வைத்திருந்தார்.

இவற்றின் மூலம், உடலுறுப்புகளை என்றும் இளமையாக வைத்திருந்த பிரையனுக்கு, இப்போது அவர் உடலே எதிராகவும், எதிரியாகவும் மாறியுள்ளது. ஆம் நீண்ட ஆயுளுக்காகவும், இளமையைத் தக்கவைக்கவும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் செலவழிக்கும் பிரையன் ஜான்சனுக்கு, ஆட்டோ இம்யூன் இரைப்பை அழற்சி (Autoimmune Gastritis - AIG) என்ற நாள்பட்ட, குணப்படுத்த முடியாத நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஜான்சன், "என் வயிறு தன்னைத்தானே சாப்பிடுகிறது" (My stomach is eating itself) என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்டோ-இம்யூன் அழற்சி என்றால் என்ன? பொதுவாக நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வெளியிலிருந்து வரும் வைரஸ், பாக்டீரியாக்களைத் தாக்கி அழிக்கும். ஆனால், இந்த ஆட்டோ இம்யூன் நோயில், நோய் எதிர்ப்பு மண்டலம் குழப்பமடைந்து, உடலின் சொந்த வயிற்றுச் சுவரை மற்றும் அமிலத்தை உருவாக்கும் செல்களை எதிரியாக நினைத்து அழிக்கத் தொடங்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றுப் பகுதி சேதமடைவதால், உணவிலிருந்து இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றை உடலால் உறிஞ்ச முடியாது. அதேபோல இது கடுமையான ரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும், நீண்ட காலத்திற்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் இந்த வீக்கம், எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

பிரையன் விஷயத்தில், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக பிரையனின் உடலில் இரும்புச் சத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், அவரது ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்ததால், மருத்துவர்கள் இதனைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் அண்மையில் அவரது மருத்துவக் குழுவினர் நடத்திய விரிவான எண்டோஸ்கோபி மற்றும் வயிற்றுப் பகுதியில் எடுக்கப்பட்ட 5 பயாப்ஸி பரிசோதனைகளின் முடிவிலேயே, அவருக்கு ஆரம்பக்கட்ட 'ஆட்டோ இம்யூன் இரைப்பை அழற்சி' இருப்பது உறுதியானது.

முன்னதாக தன்னை இளமையாக வைத்துக்கொள்ள ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் ரூபாயை இவர் செலவிட்டு வந்தார். ஆண்டுக்கு 16 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் தன்னை பார்த்துக் கொண்டவருக்கே நோய் வந்திருப்பது, மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் பிரையன், “நிச்சயம் இதையும் நான் வெல்வேன். இதுவரை யாரும் இதற்குத் தீர்வை காண முயலவில்லை என்பதால் மட்டுமே இது குணப்படுத்த முடியாத நோய் அல்ல” என்று சவால் விட்டுள்ளார். இந்த நோய்க்கு சிகிச்சை கண்டறிய வேண்டும், அதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக தனது உடலிலிருந்து 10 லட்சம் நோய் எதிர்ப்புச் செல்களை மரபணு சோதனைக்கு உட்படுத்தி, தனது சொந்த மருத்துவக் குழுவோடு இணைந்து புதிய சோதனை முயற்சிகள் மூலம் இந்த நோயை வெல்லப் போவதாக அறிவித்துள்ளார்.

news18


 


Post a Comment

0 Comments