
அமெரிக்க ராணுவ வரலாற்றில் முதல்முறையாக கடல்சார் டிரோன்களை பயன்படுத்தி ஈரான் துறைமுகங்களை தாக்கி இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கின. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் தொடரவில்லை. ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரானியப் படை தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா, அமைதி ஒப்பந்தம் ரத்தானதாக அறிவித்த கையோடு பதிலடி கொடுத்தது.
இதனால், மேற்காசிய நாடுகளில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், வரலாற்றிலேயே முதல்முறையாக கடல்சார் டிரோன்களை பயன்படுத்திய அமெரிக்க ராணுவம், ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் கடற்படைத் தளத்தை தாக்கியுள்ளது.
கப்பல் பராமரிப்பு நிலையம் மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மீது வெற்றிகரமாக தாக்குதல் நிகழ்த்தியதாகப் பெருமிதம் தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவம், வர்த்தகக் கப்பல்களைத் தாக்கும் ஈரானின் செயல்திறனைக் குறைப்பதே தாக்குதலின் நோக்கம் என விளக்கம் அளித்துள்ளது.
.
அதே சமயம், ஏமன் தலைநகர் சனாவில், ஈரானின் ஆதரவு அமைப்பான ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஈரான் விமானத்தை தரையிறக்க முயன்றதால் தங்கள் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை தாங்களே தாக்கியதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சவுதி மீது சந்தேகத்தைத் திருப்பும் ஹூத்திகள், பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளன.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில், ஈரான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாக டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஈரான் கப்பல்கள் மீதான முற்றுகையை மீண்டும் அமல்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மற்ற அனைத்து நாடுகளும் ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா ‘ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலர்’ என தனக்குத்தானே அறிவித்துக் கொண்ட டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க 20 சதவீதம் வரி வசூலிக்கப்படும் எனவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் வரி வசூலிப்பது சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது என கண்டித்து வந்த டிரம்ப், தற்போது அந்த வரியை தாங்களே வசூலிக்கப் போவதாக அறிவித்திருப்பதற்கு சர்வதேச கடல்சார் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தானதாக தங்கள் தரப்பில் அறிவித்துள்ள ஈரான் அரசு, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் கிடையாது எனத் தெரிவித்துள்ளதால் போர் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments