
SL vs IND Test Series: இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில், 15 பேர் கொண்ட இந்திய ஸ்குவாடில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் யார் என்ற கணிப்பை இங்கு காணலாம்.
இந்திய அணி நடப்பு ஜூலை மாதத்தில் பெருந்தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் இந்திய அணி பலமாக இருப்பதாக கூறப்படும் வெள்ளைப் பந்து போட்டிகளில்தான் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் 0-2, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் 0-4, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் 1-2 என தொடர்ச்சியாக தொடரை இழந்திருக்கிறது. கடைசி 10 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே கிடைத்திருக்கிறது.
இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள்
வரும் வியாழக்கிழமை (ஜூலை 23) ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் தொடங்குகிறது. ஜூலை 26ஆம் தேதிவரை இந்த தொடர் தொடரும். இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அடுத்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமெனில் இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியமானதாகும். இந்திய அணி தற்போது 5வது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்துள்ளன.
இந்தியாவுக்கு மீதம் இருக்கும் டெஸ்ட் தொடர்கள்
இந்திய அணிக்கு 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் (Away), நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் (Away), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் (Home) என 9 டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இவற்றில் அதிக வெற்றிகளை பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான பயணம் சாத்தியமாகும்.
பும்ரா, ஜடேஜா டெஸ்ட் கம்பேக்
தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தை கம்பீர் - கில் ஜோடி திட்டமிட்டு வருகிறது. கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் மாதம் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலும் அது முழுமையான இந்திய டெஸ்ட் அணி கிடையாது.
கடைசியாக கடந்தாண்டு உள்நாட்டில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பலமான அணியை கட்டமைக்க இந்தியா விரும்பும். எனவே, பும்ரா, ஜடேஜா ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்குள் வருவார்கள். இலங்கை தொடர் என்பதால் பிரீமியம் சுழற்பந்துவீச்சாளர்களும் அதிகளவில் இடம்பெறுவார்கள்.
வாஷிங்டன் சுந்தர் காயம்
வாஷிங்டன் சுந்தருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஓடிஐ போட்டியில் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 3வது ஓடிஐ போட்டியில் இருந்தே விலகிவிட்டார். அவரது காயத்தின் தன்மை குறித்து விரிவாக தெரிந்த பின்னரே அவர் இந்திய அணி ஸ்குவாடில் இடம்பெறுவாரா என்பதே தெரியவரும். ஜடேஜா வருகையால் வாஷிங்டன் இல்லாதது பெரிய பிரச்னை இல்லை.
பிரீமியம் ஸ்பின்னர்கள் யார் யார்?
பயிற்சி ஆட்டத்தை விளையாடும் பொருட்டு இந்திய அணி ஆகஸ்ட் 4ஆம் தேதியே இலங்கை புறப்படும் என தெரிகிறது. அப்படியிருக்க, இந்த வாரத்திலேயே இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. வாஷிங்டன் இடத்தில் மானவ் சுதார் விளையாடுவார். குல்தீப் யாதவுக்கு நிச்சயம் இடம் கொடுக்கப்படலாம்.
வேகப்பந்துவீச்சு படை
வேகப்பந்துவீச்சை பொருத்தவரை பும்ரா இடம்பெறுவது உறுதி. குர்னூர் பிரர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இலங்கையில் சிராஜ் கடந்த காலங்களில் சிறப்பாக பங்களித்துள்ளார் என்பதை மறக்க முடியாது.
இந்திய அணி ஸ்குவாட் கணிப்பு
கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மான் கில் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த், துருவ் ஜூரேல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா/குர்னூர் பிரர்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments