
எல் நினோவின் தாக்கத்தால் அடுத்த ஆண்டு மனித வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவான ஆண்டாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
நடப்பு ஆண்டின் 'எல் நினோ' பாதிப்பு, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையானதாக இருக்கும் என்று பிரிட்டனின் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அது ஏன், எல் நினோ என்றால் என்ன, அடுத்தடுத்த மாதங்களில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்...
எல் நினோ என்பது என்ன? எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு உலகளாவிய வானிலை மாற்றம் ஆகும்.
இந்த வருடம் எல் நினோவின் தாக்கம் எப்படி இருக்கும்? நடப்பு ஆண்டில், ஜூன் மாத தொடக்கத்தில் எல் நினோ உருவானது. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக எல் நினோ நிகழ்வின் போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும். ஆனால், தற்போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகை உலுக்கிய 1997 மற்றும் 2015 ஆண்டுகளில் ஏற்பட்ட 'சூப்பர் எல் நினோ' நிகழ்வுகளை விட, தற்போதைய வானிலை மாற்றங்கள் மிகக் கடுமையாக உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே புவி வெப்பமயமாதலால் வளிமண்டலம் சூடாக இருக்கும் சூழலில், எல் நினோவும் இணைவது எரியும் நெய்யில் எண்ணெயை ஊற்றுவது போல் புவியின் வெப்பநிலையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்? தெற்காசிய நாடுகளில் பருவமழை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மழைப்பொழிவு இயல்பை விட பெருமளவில் குறையும் என்றும், இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் தீவிர வறட்சியால் காடுகளில் தீப்பற்றி எரியும் அபாயம் அதிகரித்துள்ளது. பெரு, ஈக்வடார் மற்றும் பிரேசிலின் தென் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேகவெடிப்பு மற்றும் கனமழை பெய்து, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கை உருவாக்கும்.
பெருங்கடல்கள் அதிக வெப்பமடைவதால் ஆஸ்திரேலியாவின் 'கிரேட் பேரியர் ரீஃப்' உட்பட உலகெங்கிலும் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகள் பெருமளவில் அழியும் அபாயம் உள்ளது. பயிர்கள் நாசமாவதால் அரிசி, சர்க்கரை, கோதுமை, காபி மற்றும் பாமாயில் ஆகியவற்றின் உலகளாவிய உற்பத்தி குறைந்து, உலகளவில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும்.
வறட்சி காரணமாக பனாமா கால்வாயில் நீர்மட்டம் குறைந்து, உலகளாவிய சரக்குக் கப்பல் போக்குவரத்து தடைபடும் என பிரிட்டன் வானிலை மையம் கூறியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை எல் நினோ உருவான ஆண்டுகளில் இயல்பை விட மிகக் குறைந்த மழையே பெய்துள்ளது.
குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பருவமழை வழக்கத்தை விடக் கணிசமாகக் குறையும் என கூறப்படுகிறது. நெல், கரும்பு, சோளம், துவரை, உளுந்து மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற தென்மேற்குப் பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் பயிர்களின் உற்பத்தி பெருமளவில் வீழ்ச்சியடையும்.
எல் நினோவின் தாக்கத்தால் அடுத்த ஆண்டு மனித வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவான ஆண்டாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments