
வாழை இலையின் இருகோணங்களையும் தமது இரு கைகளின் விரல்களைக் கொண்டு பிடித்துக் கொள்ளும்படி, இரண்டு சிறுமியர்களுக்கும் கூறிய மருத்துவச்சி, அதனை இரண்டாகக் கிழிக்கும்படி குறிப்பிட்டார். சிறுமிகள் பட்டென இழுத்துக் கிழித்தபோது, இலை மூன்றாகக் கிழிந்து, இரண்டு துண்டுகள் அவர்களின் கைகளில் தங்க, ஒரு துண்டு கீழே விழுந்தது!
ரெங்க்மாவுக்குப் பிறக்கப் போவது “ஆண் குழந்தை” என்று கூடி நின்றவர்களிடத்தில் மருத்துவச்சி பகிரங்கப்படுத்திவிட்டு, அங்கிருந்தும் சென்றார்!
தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செரோக்கியின் தந்தையின் மகிழ்ச்சி இரட்டிப்பானது! தான் நினைத்தபடி தன் பேரனுக்கு “செக்கோவ்” என்ற பெயரை
வைப்பதில் எவ்விதத் தடையுமிருக்கமாட்டாது என்பதில் அவர் உவகைமிகக் கொண்டார்.
கூடி நின்றிருந்தவர்களை விலக்கிவிட்டு, ரெங்க்மாவிடத்தில் வந்து நின்ற செரோக்கி, அவளை வாஞ்சையோடு வாரியணைத்துக் கொண்டான்.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த புரோகோனிஷ் பழங்குடியினர், மகிழ்ச்சிப்பிரவாகத்தில் தமக்கேயுரிய ஆடல் பாடல்களோடு, நீண்ட நேரமாக அந்த இளந் தம்பதியினரைச் சுற்றிவலம் வந்தனர்.
மகிழ்ச்சியின் விளிம்பில் நின்றிருந்த தம்பதியினரின் பெற்றோர், அன்றையதினம் இரவுக்களியாட்டமொன்றை ஏற்பாடு செய்ய விழைந்தனர்.
ரெங்க்மாவின் தந்தை தனது ஜாகைக்குச் சென்று இந்த நற்செய்தியைத் தனது அயல்வாசிகளிடத்தில் கூறினார்!
பின்னர் தனது ஜாகைக்குள் நுழைந்த அவர், தான் சில தினங்களுக்கு முன்னர் வேட்டையாடிவந்து பரணில் தொங்கவைத்திருந்த மான் மாமிசத்தைத் தன் தோள்மேல் சுமந்தவராக செரோக்கியின் மனைக்கு வந்தார்!
ரெங்க்மாவுக்கு ஆண் குழந்தை கிடைக்கப் போகும் நற்செய்தி கேட்ட சிங்கினி, அதனை தன் காதலனிடத்தில் கூறிவிட வேண்டும் என்ற நோக்கில் கானகத்துக்குள் நுழைந்தாள்!
‘தெல்லிஜெய்’ முட்டியோடு அப்போதுதான் ரங்கு கித்துள் மரமொன்றிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.
மரத்திலிருந்து நிலத்தில் காலடிவைத்த ரங்கு சிங்கினியைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments