Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம் – 142


எல்லோரும் மனதில் ஓடிய கேள்வியைக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சின்ன மருமகள் மட்டும் "அப்படியா? 
என்னவா இருக்கும் அக்கா?” என்று மூத்தவளைச் சுரண்டி ரகசியமாகக் கேட்டுக் கொண்டாள்.

அவளுக்குத்தான் பொறுமை இல்லையே!
“வாடி, பெத்த பிள்ளையோ நான் அறியேன்!” என்று மூத்தவள் சிரித்தபடி,

“தெரியாதே!” என்று தலையசைத்தாள்.

இனிதே விருந்து முடிந்தது.

திண்ணையில் அமர்ந்து கனிகள் சாப்பிட்டுக் கொண்டு உரையாடிக் கொண்டிருந்தபோது, நீதிபதி கூறினார்:

“எப்படியோ அம்மா, என் தொழில் மேல் இருந்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்ட சந்தோஷத்தோடு நான் மீண்டும் அமெரிக்கா போகிறேன். காலம் கை கொடுத்தால் அம்மாவை அங்கே அழைத்துச் செல்கிறேன். இல்லாவிட்டால், மறு முறை நீதிபதியாக அல்லாமல் உங்கள் மகனாக வந்து இங்கேயே தங்கி, சந்தோஷமாக நாட்களைக் கழித்துவிட்டு போகிறேன்.”
என்றார்.

அப்போது பாட்டி கேட்டார்:
“பாவம்டா... அந்த சந்திரா பொண்ணு! அவ வீடு கிடைச்சிடும்தானே?”

அந்தக் கேள்வியைக் கேட்டதும் அனைவரின் முகத்திலும் ஒரு புதுவிதத் தெம்பு தெரிந்தது.

“நம் கேள்விக்கு விடை கிடைக்கப் போகிறது! நல்ல வேளை அத்தையே கேட்டுவிட்டார்!” என்று சின்னவள் எல்லோரையும் விட ஆவலாக இருந்தாள்.

உடனே நீதிபதி மகன் கூறினான்:
“கிடைக்கும் அம்மா. வீடு இல்லை. சற்று விலை குறைவாக அந்த வீட்டை அரசு எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தை வழங்கும். அந்த வீட்டில் அவர்கள் குடித்தனம் நடத்தலாமா? அந்த இடத்தை அரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கியமான தளமாக மாற்றப் போகிறது.

பூசாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட்டேன். நாளை நாளிதழில் வரும். பாருங்கள்.

இன்று அரசு ஊழியர்கள் அங்கே அறிவிப்புப் பலகை ஒன்றை நிறுவுவார்கள். அதில் அந்த இடம் எதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் எழுதப்பட்டிருக்கும்.”

என்று கூறிவிட்டு தாயைப் பார்த்தான்.

பின்னர் சில நிமிடங்கள் பயணம் பற்றிப் பேசி, அனைவரிடமும் விடைபெற்று அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே லூசியாவும் மேரி அக்காவும் வந்து சேர்ந்தார்கள்.

நீதிபதி கூறிய விஷயத்தை சின்னவள் அவர்களிடம் கூறினாள்.

அதைக் கேட்ட லூசியா உடனே,
“அட, பியூட்டி பார்லர் திறந்தா நல்லா இருக்கும்! இல்லாட்டி ஐஸ்கிரீம் பார்லர் திறந்தா இன்னும் நல்லா இருக்கும்!” என்றாள்.

மேரி அக்கா சிரித்தபடி,
“அடி போடி! காம்ப்ளக்ஸ் திறந்தா நல்லா இருக்கும். நானும் போய் நாலு காசு உழைப்பேன்!” என்றார்.

உடனே பாட்டி சொன்னார்:
“நாட்டு வைத்திய மையம்னா எல்லோருக்கும் நன்மை. வயசு போன நேரத்தில் அருகிலேயே போய் வந்திருக்கலாம்.”

அதுவரை அமைதியாக இருந்த சின்னவள் சொன்னாள்:
“அதெல்லாம் எதற்கு? அது எங்க பார்த்தாலும் இருக்கு. ஒரு சினிமா தியேட்டர் வந்தா ஆஹா... சூப்பராக இருக்கும்!”

என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையானதை நினைத்து பட்டியல் போட்டுக் கொண்டார்கள்.

ஆனால்...

அங்கே வந்தது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்றுதான்.

ஆனால் அவர்கள் பட்டியலில் அது இல்லை.

அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும்...

அனைவரும் வாய் அடைத்து நின்றார்கள்!

(தொடரும்)


 


Post a Comment

0 Comments