Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம் – 143


அப்படி என்னதான் அந்த அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது?

ஆம்... மக்களுக்கு தேவையான ஒன்றுதான். மிக மிக முக்கியமான ஒன்றுதான்.

பல சித்தி வேலைகள் செய்து, மந்திரம் மாந்திரீகம் செய்து, சுடலைச் சாம்பலைப் பயன்படுத்தி, எத்தனையோ நரபலிகள் கொடுத்து, பிணங்களைப் புதைத்து என பல கொடூரங்களை நடத்தி முடித்த அந்தப் பாவி பூசாரியின் செயல்களுக்கு வேறு என்ன தண்டனை அளிக்க முடியும்?

அதனால்தான் அரசு அந்த நிலத்தை பொது மயானமாக அறிவித்துவிட்டது.

"இனம், மதம் என்று பிரிக்காமல் அனைவருக்கும் இறுதி இடமாக இம்மயானம் பயன்படும். எரிப்போருக்கும் புதைப்போருக்கும் இங்கு அனுமதி உண்டு" என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதோடு, அங்கிருந்த அனைத்து செடிகொடிகள், இல்லம், கிணறு என அனைத்தையும் அகற்றும் பணியும் உடனடியாக தொடங்கியது.

பாதையோரம் மறைப்புச் சுவர் எழுப்பப்பட்டதும், அதை மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றும் அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு அன்றைய நாளிதழிலும் வெளியானது.

இதையறிந்த நொடியே பாட்டியின் குடும்பமே வாயடைத்துப் போனது. ஏன், லூசியா மேரிகூட அதிர்ச்சியடைந்தாள்.

ஏதேதோ நினைத்திருந்தார்கள்.

"சே... இப்படி ஆகிவிட்டதே!" என்று சலித்துக்கொண்டாலும், அவர்களது மனம் அதை நியாயம் என்றே ஏற்றுக்கொண்டது.

"பிணங்களைப் புதைத்த நிலம்தானே அது? அப்படியென்றால் இதுதான் அதற்குச் சரியான முடிவு," என்று பேசிக்கொண்டனர்.

"எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிட்டது. என்ன பண்ணலாம்?" என்று மேரி அக்கா சிரித்தபடி சொல்ல,

சின்னவள் இறுக்கமான முகத்தோடு,

"நமக்கு ஏமாற்றம் இதில் மட்டுமா? எல்லாமே அப்படித்தான்.

இதோ பார்... ராஜகுமாரி கதையில் அத்தை மருத்துவரை பாதியிலேயே நிறுத்துவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. அவங்க அதைச் செய்து ஏமாற்றிட்டாங்க.

இப்போ இரவுக்குக் கதைத் தொடரை எப்படி ஆரம்பிப்பாங்களோ தெரியல. குமரன் இல்லாத கதையைக் கேட்கவே பிடிக்கல. இருந்தாலும் முடிவை அறியும் ஆவலில் கதை கேட்கணும் போல இருக்கு..." என்று வெறுப்போடு சொன்னாள்.

அப்போது மேரி அக்கா,

"நான் நினைக்கிறேன், இன்றைய தொடரில் ராஜகுமாரிக்கு பட்டம் சூட்டி, ராஜ்யப் பொறுப்பை ஒப்படைப்பாங்க," என்றாள்.

உடனே மூத்தவள்,

"இல்லை அக்கா. அவளது கணவரின் தந்தை, அடுத்த நாட்டு மன்னரின் வருகைதான் இருக்கும்," என்றாள்.

இதைக் கேட்ட சின்னவள்,

"நீங்க நினைக்கிற மாதிரி அவங்க கதையைக் கொண்டு போக மாட்டாங்க. சும்மா கற்பனை பண்ணி ஏமாறாமல் இருங்க," என்று சற்று வெறுப்போடு கூறினாள்.

சரி... இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், வாசகர்களே?

யார் சொன்னது நடக்கும்?

இத்தோடு பூசாரி, நீதிபதி, சந்திரா இவர்களின் கதாபாத்திரம் முற்றுப்பெறுகிறது.

( தொடரும்)

ஆர்.எஸ்.கலா


 


Post a Comment

0 Comments