Ticker

6/recent/ticker-posts

66 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்! – ரூ. 6000 மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் முடக்கம்!


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்த 66 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2024 செப்டம்பர் 21 முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான சந்தேகநபர்களுக்கு எதிரான 113 விசாரணைகளுடன் தொடர்புடைய 6,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக (ரூ. 6,000,154,630.75) பெறுமதியான சொத்துக்களை இக்காலப்பகுதியில் முடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 5,423 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடையது என்பதுடன், மூன்று நபர்களுக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடையதாகும். பிரமிட் மோசடிகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 08 நபர்களின் 367 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் இதில் அடங்குகின்றன.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் 2 கிலோகிராம் 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களில் ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) பிறப்பிக்கப்பட்ட 28 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படாத 38 சந்தேகநபர்களும் அடங்குகின்றனர். 2024 செப்டம்பருக்குப் பிறகு சர்வதேச பொலிஸார் (Interpol) ஊடாக சந்தேகநபர்களை அழைத்து வருவதற்குத் தேவையான 110 புதிய சிவப்பு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி நிலவரப்படி இலங்கை பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட மொத்த சிவப்பு எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 236 ஆகும். அவற்றுள் 96 சிவப்பு எச்சரிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேகநபர்களுக்காகப் பெறப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையக அறிக்கைகளின்படி, அவர்களில் 35 பேர் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, 18 சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும், 11 பேர் இந்தியாவிலும் தங்கியுள்ளதுடன், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாக உள்ளமை தெரியவந்துள்ளது.

lankatruth


 


Post a Comment

0 Comments