
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கும், அவரது சகோதரர் மஹெர் மற்றும் அசாத்துடைய ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகித்த நபர்கள் சிலருக்கும் சிரிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அசாத் குடும்பத்தின் இரும்புக்கர ஆட்சியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரிய மக்கள் இந்தத் தீர்ப்பை மிக முக்கிய சட்டப்பூர்வ நீதியாகப் பார்க்கின்றார்கள்.
சிரியா 14 மாநிலங்களை உள்ளடக்கிய குடியரசாகும். டமாஸ்கஸ் இதன் தலைநகரம். 185,180 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர்.
2011ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது.
அதிபர் பஸார் அல்- ஆஸாத் - ரஷ்யா, ஈரான் நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வந்ததனால், அவரது அரசை ஒழிக்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தீவிரமாகச் செயற்பட்டன.
இதற்கென இந்நாடுகள் கிளர்ச்சிக் குழுக்களைத் தூண்டிவிட்டும், ஆயுதங்களை கொடுத்தும் நாட்டிற்குள் கலவரங்கள் வெடிப்பதற்கும் ஏற்பாடு செய்தன.
இந்நிலையில், சிரியாவில் 2015ல் நடந்த போர், அதிபர் ஆஸாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் நிலை ஏற்பட்டபோதிலும், சிரியாவுக்கு உதவ ரஷ்ய ராணுவம் நேரடியாக களம் இறங்கி, ரஷ்யாவின் முப்படைகளும் சிரிய கிளர்ச்சிப் படைகள் மீது தாக்குதல் நடாத்தத் தொடங்கியதால், அதனைச் சமாளிக்க முடியாமல், கிளர்ச்சிப் படையினர் ஓட்டம் பிடித்தமையினால் அதிபரை ஆட்சியிலிருந்து அகற்றும் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சி தோல்வியுற்றது.
உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளமையும், இஸ்ரேலுடனான மோதலில் ஈரான் தனது படைகளை அனுப்ப முடியாத சூழலிலினாலும், சிரியா அதிபருக்கு ஆதரவாகப் போரிட்டு வந்த ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் தாக்குதலினால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளமையாலும், அதிபர் ஆசாத்துக்கு எதிராகப் புதிதாக உருவான கிளர்ச்சிப்படை, துருக்கி ராணுவத்தின் ஆதரவுடன் முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கி அஸாதை நாட்டைவிட்டும் துரத்தியது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளிக் குழுவே முக்கிய காரணமாகும். அல் கொய்தாவின் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி உருவாக்கியதே HTS என்ற அமைப்பாகும்.
இந்நிலையில், பஷார் அல்-அசாத்தும், அவரது சகோதரரும் 2024ல் ஆட்சி கவிழ்ந்தவுடன் சிரியாவை விட்டும் தப்பி ஓடி, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தனர்; அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஷ்யா மனிதாபிமான அடிப்படையில் அரசியல் புகலிடம் வழங்கியதால், மாஸ்கோவில் அவர்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வரும் நிலையில்தான் இந்த அதிர்வுச் செய்தி வெளியாகியுள்ளது!
14 ஆண்டுகால சிரிய உள்நாட்டுப் போரின்போது திட்டமிட்ட கொலைகள், அப்பாவி மக்கள் மீதான கொடிய சித்திரவதைகள், மக்களின் சுதந்திரத்தை சட்டவிரோதமாகப் பறித்தமை, தன்னிச்சையான கைதுகளை மேற்கொண்டமை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் பஷார் அல்-அசாத் மீது நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
மரண தண்டனை வழங்கப்பட்டோர்களுள், 'டேரா' மாகாணத்தின் முன்னாள் அரசியல் பாதுகாப்புப் பிரிவுத் தலைவரும், அசாத்தின் உறவினருமான ஆதேப் நஜிப் மற்றும் அசாத் ஆட்சிக்காலத்தின்
பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ஃபஹத் அல் ஃப்ரெஜ் ஆகியோரும் அடங்குவர்.
இடைக்கால சிரிய அரசு அசாத்தையும், அவர் தம்பியையும் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு ரஷ்யாவிடம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தபோதிலும், ரஷ்யா மறுத்தே வந்துள்ளது.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் கூட, அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு ரஷ்யா உடன்படுவதாக இல்லை என்பதால், சிரிய நீதிமன்றத்துக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், நீதிமன்றக் கூண்டில் அடைக்கப்பட்டு நேரடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆதேப் நஜிப்பின் மரண தண்டனை கெதியில் நிறைவேற்றப்படலாம் என நம்பப்படுகின்றது.
சிரியாவின் புதிய அரசு, அசாத்தை ஒப்படைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்து வந்தபோதிலும், ரஷ்யா இன்றுவரை மறுத்தே வருகின்ற நிலையிலும் கூட, ரஷ்யாவுடனான சிரிய அரசின் உறவுகள் இடையூரின்றித் தொடர்கின்றன.
நடைமுறையில், அசாத் ரஷ்யாவில் இருக்கும் வரை மரண தண்டனை நிறைவேற்ற முடியாது; சிரியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தாலும், ரஷ்யா அசாத்தை ஒப்படைக்க மறுப்பதால் அது நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்றுதான் கருதப்படுகின்றது.
சுவாரஸ்யமான திருப்பத்துக்கு வந்துள்ள ரஷ்யா - சிரிய விவகாரம், ஆரம்பத்தில், “அசாத்தை எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று கோரப்பட்ட நிலையிலிருந்து, “மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியை எங்களிடம் ஒப்படையுங்கள்” என்ற நிலையில் இப்போது உள்ளது.
முன்னைய ஆட்சிக் காலத்தில் தனது முக்கிய மத்திய கிழக்கு கூட்டாளியாக இருந்த அசாத்தை ஓரங்கட்டிவிட்டு, 2024ல் ஆட்சி மாற்றத்தின் பின் அஹ்மத் அல் ஷராவுடன் புதிய உறவை உருவாக்குவதற்கு 'புதின்' முயற்சி செய்து வந்தார்.
சிரியாவின் புதிய அதிபர் அகமது அல்-ஷரா என்பவர் யார்?

1982 அக்டோபர் 29, சவூதி அரேபியாவின் ரியாதில் பிறந்து, வாழ்ந்த சிரிய குடும்பத்தவரான இவரின் முந்தைய பெயர் அபு முகமது அல்-ஜொலானி.
இவர் சிரியாவின் அதிபராக 2025 ஜனவரி 29 முதல், 5 ஆண்டு இடைக்கால காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.
1989ல் இவரது குடும்பம் சிரியாவுக்குத் திரும்பி, டமஸ்கஸில் வளர்ந்துள்ளார்.
2003ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த போது அல்-கைதாவுடன் சேர்ந்து போராடியவேளை, அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
2011க்குப் பிறகுசிறையிலிருந்து விடுதலையாகி சிரியாவுக்குத் திரும்பி, அசாத் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவர் தலைமையிலான HTS கிளர்ச்சிப் படையினர் 2024 டிசம்பரில் வேகமான தாக்குதல் ஒன்றை நடாத்தி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை கவிழ்த்தனர்.
தற்போதைய சிரியாவின் அதிபரான அஹ்மத் அல்-ஷாரா சாதாரண அரசியல்வாதியாக இருந்து அதிபரானவரல்ல; சிரிய உள்நாட்டுப் போரின் கிளர்ச்சித் தலைவராக இருந்து அதிகாரத்திற்கு வந்தவராவார்.
அல்-ஷாராவின் கடந்தகாலம் மிகவும் சர்ச்சைக்குரியது. ஒருகாலத்தில் அவர் அல்-கைதாவுடன் இணைந்த கிளர்ச்சிப் போராளியாக இருந்தார். அதனால் அவரும் அவரது அமைப்பும் சர்வதேச அளவில் பயங்கரவாதத் தொடர்புகளுடன் பார்க்கப்பட்டனர்.
ஆனால், இப்போது இவர் தன்னை சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் அரசுத் தலைவராகவும், சர்வதேச சமூகத்துடன் உறவை ஏற்படுத்தும் அதிபராகவும் முன்னிறுத்துகின்றார். 2026 ஜூலையில் இவர் இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் எதிர்கால அமைதிக்கான பேச்சுவார்த்தையை விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா, ஐ.நா. ஆகியவற்றுடனும் உறவுகளை மேம்படுத்தி வருகின்றார்.
ஒருகாலத்தில் ரஷ்யாவின் எதிரியாக இருந்த அல்-ஷாரா, இப்போது ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துகின்றார்.
ரஷ்யாவின் இராணுவத் தளங்கள், சிரியாவின் மறுகட்டமைப்பு, பொருளாதாரம், அசாத்தின் எதிர்காலம் ஆகியவை இந்த புதிய உறவின் முக்கியக் கேள்விகளாக உள்ளன.

முன்னாள் கிளர்ச்சித் தலைவர், அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்தவர், தற்போதைய சிரிய அதிபர் என்று கருதப்படும் அல்-ஷாரா உண்மையில் ஜனநாயகத் தலைவராக மாறிவிட்டாரா அல்லது சிரியாவில் புதுவடிவிலான இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குகின்றாரா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments