
ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டண (Low Fares) விமான சேவையை அந்நாட்டின் ஜெட்ஸ்டார் (Jetstar) விமான சேவை நிறுவனம் ஓகஸ்ட் 25ஆம் திகதி இரவு ஆரம்பித்துள்ளது. இதன்படி, ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் முதலாவது விமானம் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதற்காக போயிங் 787 ட்ரீம்லைனர் (Boeing 787 Dreamliner) ரக விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அந்த விமானத்துக்கு நீர் பீச்சி வரவேற்பு (Water Salute) அளிக்கப்பட்டது.
ஓகஸ்ட் 25ஆம் திகதி இரவு 6.24 மணியளவில் ஜெட்ஸ்டார் விமான சேவைக்குச் சொந்தமான JQ-005 விமானம், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இனி வாரத்திற்கு மூன்று நாட்கள், அதாவது செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், இலங்கையின் கட்டுநாயக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரங்களுக்கு இடையே இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது. இந்த விமானப் பயணத்துக்கு சுமார் 10 மணி நேரம் ஆகும்.
முதலாவது விமானத்தை வரவேற்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘சில்க் ரூட்’ (Silk Route) பயணிகள் முனையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments