Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் பொருளாதார 'D-Day' வியூகம்! அசராமல் முறியடிக்கும் ஈரான்... என்ன நடக்கிறது வளைகுடாவில்?


மத்திய கிழக்கில் நடைபெறும் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர், தற்போது வேறொரு பரிணாமத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏவுகணைகளின் தாக்குதலை தாண்டி, ஈரானை பொருளாதார ரீதியாக முடக்கி அடியோடு வீழ்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ள Economic D-Day அமலாகிறது. இதுபற்றிய முழு விவரம் கமெண்ட்டில்...

ஈரானின் ராணுவ அமைப்புகள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் ஏற்கனவே கடுமையாகச் சேதமடைந்துள்ள நிலையில், அந்நாட்டை பொருளாதார ரீதியாக முழுமையாக முடக்க அமெரிக்கா D-Day நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதுபற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

கடும் நிதி நெருக்கடியில் ஈரான்!

47 ஆண்டுகளாக சர்வதேச தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரானின் தற்போது பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஈரானின் பணவீக்கம் 80 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் தானியங்களின் விலை 160 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சராசரி குடிமக்களின் மாதாந்திர இறைச்சி நுகர்வு பாதியாகக் குறைந்துள்ளது. ஈரானின் நாணயமான ரியால் (Rial) சர்வதேசச் சந்தையில் மிகப்பெரிய மதிப்பீட்டை இழந்துள்ளது.

ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான ஈரானிய ரியாலின் மதிப்பு சந்தையில்  20 லட்சம் ரியால்களை கடந்து வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. என்னதான் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும், உள்நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வாகனங்களுக்கான பெட்ரோல் அளவைக் குறைத்து, பெட்ரோல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. ஈரான் கச்சா எண்ணெயை நிலத்தடியிலிருந்து எடுத்தாலும், அதை வாகனங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பெட்ரோலாகவும் டீசலாகவும் மாற்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தேவை.

மற்றொருபக்கம், அமெரிக்க வான் தாக்குதலில் ஈரானின் முக்கிய சுத்திகரிப்பு வளாகங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஈரானிடம் கச்சா எண்ணெய் அபரிமிதமாக இருந்தாலும், புதிய சுத்திகரிப்பு ஆலைகளைக் கட்ட தேவையான தொழில்நுட்பப் பாகங்கள் கிடைப்பதில்லை.

இதனால், நாட்டின் மொத்தப் பயன்பாட்டுக்குத் தேவையான பெட்ரோலை கூட உள்நாட்டிலேயே சுத்திகரிக்க முடியாமல் ஈரான் திணறி வருகிறது. இது மட்மல்லாமல், அமெரிக்கத் தடைகளால் புதிய கார்கள் ஈரான் சந்தைக்கு வருவதில்லை. ஈரானிய மக்கள் இன்னும் 20 ஆண்டுகள் பழைய, அதிகளவில் எரிபொருளைக் குடிக்கும் குறைந்த தரம் கொண்ட கார்களையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது பெட்ரோல் தேவையை பல மடங்கு உயர்த்தி, தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் ஈரான் அரசு தற்போது எரிபொருள் விநியோகத்தி ஏராளமான  கட்டுப்பாடுகளை விதித்து பெட்ரோல் விலையையும்  உயர்த்தியுள்ளது.

சரிந்த எண்ணெய் ஏற்றுமதி!

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வரும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் சரிந்துள்ளது. போர் தொடங்குவதற்கு முன் நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்களுக்கும் அதிகமாக எண்ணெய் ஏற்றுமதி செய்த ஈரான், தற்சமயம் மிகக் குறைந்த அளவே ஏற்றுமதி செய்கிறது.

இதனால் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கடன் மட்டும் 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, உற்பத்தித் துறைகள் பல நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. அங்கு உற்பத்தியே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானிய மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். 25 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 50% பேர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

எனினும் அமெரிக்காவின் “Economic D-Day”-வை எதிர்கொள்ள ஈரான் சில முக்கிய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. ஈரானிய தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சன் ரெஸாய் (Mohsen Rezaei), அமெரிக்காவின் பொருளாதாரப் போர் தொடர்ந்தால், ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா வழியாக "ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்பட விடமாட்டோம்" என்று எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் "டி-டே" தடைகள் சீனாவுடனான ஈரானின் வர்த்தகத்தைக் குறிவைப்பதால், ஈரான் சீனாவுடன் மேலும் வர்த்தக நெருக்த்தை காட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. சீனாவின் ஒத்துழைப்பு இல்லாமல் அமெரிக்க தடைகள் முழுமை பெறாத என்பதால், ஈரான் தனது முழு நம்பிக்கையை இழக்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்க டாலரைப் பயன்படுத்தாமல், சீன-  யுவான் மற்றும் கிரிப்டோ நாணயங்கள் மூலம் சீனாவுக்குத் தொடர்ந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. மறுபுறம் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு, ஹார்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு சேவைக் கட்டணம்  விதிப்பதற்கான வரைவுச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக கொண்டு வரப்பட்ட Strategic Action for Securing and Advancing the Strait of Hormuz சட்டம் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் படி ஹார்முஸ் நீரிணை வழியேச் செல்லும்  கப்பல்களுக்கு Maritime Navigation Services, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறப்புச் சூழல்களில் வழங்கப்படும் எரிபொருள், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற ஈரானின் எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு முழுமையான தடை நீடிக்கும் என ஈரான் அறிவித்துள்ளது. கட்டணத்தை ஈரானிய ரியால் (Rials) அல்லது ஈரான் அரசு நிர்ணயிக்கும் மாற்று நாணயத்தில் மட்டுமே செலுத்த வேண்டும். தற்போது அங்கரிக்கப்பட்டுள்ள இந்த சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு கொண்டு செல்லப்படும். அரசியலமைப்பு மற்றும் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். அதிபர் கையொப்பமிட்டதும் இது அதிகாரப்பூர்வச் சட்டமாக நடைமுறைக்கு வரும்.

முன்பு ஹார்முஸ் நீரிணை வழியே சர்வதேசக் கப்பல்கள் இலவசமாகச் செல்ல சர்வதேச சட்டங்களில் வழியிருந்தது. ஆனால், தற்போதைய அமெரிக்க முற்றுகைக்குப் பதிலடியாக ஈரான் இந்த கட்டண முறையைக் கொண்டுவருவது, உலகளாவிய கடல்சார் வர்த்தகச் செலவுகளை கடுமையாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் அமல்படுத்த உள்ள "ஹார்முஸ் வரி" உலக அளவில் புதிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்
.
உலகளவில் 20% கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) கடந்து செல்லும் இந்த முக்கியமான கடல் வழியில் கட்டணம் வசூலிப்பது, உலகப் பொருளாதாரத்தில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். எரிவாயு கொண்டுச் செல்லும் கப்பல் நிறுவனங்கள் ஈரானுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் நேரடியாகக் கச்சா எண்ணெய் மற்றும் LNG விலையில் சேர்க்கப்படும்.'

சர்வதேச சந்தைக்கு என்ன பாதிப்பு?

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், இயற்கை எரிவாயு விலையும் கடுமையாக அதிகரிக்கும். ஹார்முஸ் நீரிணை போர் மண்டலமாக மாற்றப்பட்டு, கட்டணமும் விதிக்கப்படுவதால், கப்பல்களுக்கான "War Risk Insurance Premium  பல மடங்கு உயரும்,  உலகளாவிய Supply Chain பாதிக்கப்படும். யூரியா (Urea) மற்றும் அம்மோனியா (Ammonia) உர ஏற்றுமதியில் 30 சதவிகிதம் வரை  ஹார்முஸ் வழியாகவே நடக்கிறது.
கப்பலுக்கான  கட்டண உயர்வதால் உரங்களின் விலை உயர்ந்து, உலகளவில் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். ஹார்முஸ் நீரிணை வழியே செல்லும் கச்சா எண்ணெயில் சுமார் 75 சதவிகிதம் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கே  இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பதால், ஆசிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு டாலருக்கு எதிராகச் சரிந்து அந்தந்த நாடுகளின்  வர்த்தகப் பற்றாக்குறை  அதிகரிக்கும்.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மட்டுமே ஹார்முஸ் நீரிணையைத் தவிர்க்க சில குழாய் வழி விநியோகம்  உள்ளது. ஆனால், ஈராக், குவைத், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணையைத் தவிர வேறு கடல்வழிப் பாதை இல்லை. எனவே ஈரானின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த வளைகுடா மண்டலத்தின் ஏற்றுமதியையும் முடக்கும்.

1982-ஆம் ஆண்டின் சர்வதேசக் கடல்சார் சட்டத்தின்படி , சர்வதேச நீரிணைகளில் வர்த்தகக் கப்பல்கள் எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பயணிக்கும் உரிமை  உள்ளது. ஈரானின் இந்த  கட்டண விதிப்பு சர்வதேசக் கடல்சார் அமைப்புகளுடனான  மோதலை அதிகரிக்கும். இதனால் சர்வதேசக் கடல்வழி வர்த்தக விதிகளே சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவிடமிருந்து தப்பித்து தனது மக்களை காப்பாற்ற ஈரான் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கை எடுப்பது நியாயமானதே என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் "Economic D-Day" திட்டத்திற்கு, "உலகப் பொருளாதாரத்தின் மூச்சுக்குழலையே அடைப்போம்" என ஈரான் கொடுத்திருக்கும் "ஹார்முஸ் வரி" பதிலடி, மத்திய கிழக்கை ஆபத்தான நிதிப் போர்க்களமாக மாற்றியுள்ளது.

47 ஆண்டு காலமாக தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரானுக்கு இது வாழ்வா-சாவா போராட்டம்; ஆனால், நடுநிலையாக இருக்கும் இந்தியா போன்ற  உலக நாடுகளுக்குகோ இது தவிர்க்க முடியாத  நெருக்கடி. அமெரிக்காவின் இந்த Endgame ஈரானைப் பணிய வைக்குமா அல்லது உலகச் சந்தையை ஒரு புதிய மந்தநிலைக்குள் தள்ளுமா என்பதை இனிவரும் நாட்கள் தீர்மானிக்கும்.

news18


 


Post a Comment

0 Comments