
செரோக்கி கொடுத்த நாணயத்தாள்கள் என்னவென்பதை அறியாமல் புதினமாகப் பார்த்தனர் ரெங்க்மாவின் பெற்றோர். முதன் முதலாகப் புதுமையான ஒன்று தம் கைகளுக்குள் வந்ததைப்போல் அவர்கள் பிரமிப்படைந்தனர்.
ஒரு கையால் தலையிலிருந்த கூடையைப் பிடித்துக் கொண்டே மறுகையிலிருந்த அந்தத் தாள்களைத் தமது விரல்களால் உரசிப்பார்த்தபடி அவற்றை அவர்கள் இருவரும் உன்னிப்பாக நோட்டமிடலாயினர்.
ரெங்க்மாவை அழைத்துக்கொண்டு நகர்ப்புறம் சென்றுவர நினைத்த செரோக்கியின் எண்ணம் பெற்றோர் வருகையால் தடைப்பட்டுவிடுமோ என்று ஒரு கணம், ஒரே ஒரு கணம் செரோக்கி நினைத்தான்.
அவனும் ரெங்க்மாவும் பலமுறை நகருக்குள் சென்று வந்துள்ளார்கள், கிராமத்தவர் எவருக்கும் இது தெரியாது! அவன் தெரியப்படுத்தவும் விரும்பவில்லை!
வந்தவர்களைத் தன் மனைக்குள் வரவேற்ற செரோக்கி, தாள் நாணயங்கள் பற்றி அவர்கள் கேட்கப்போகும் கேள்விக்குப் பதில் கூறத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவனாக அவர்கள் திருப்பி நீட்டிய நாணயத் தாள்களை எடுத்துத் தம் வசப்படுத்திக் கொண்டதும், அவர்கள் சுமந்து வந்தவைகளைத் தரையில் வைத்துவிட்டு விரிப்பில் அமர்ந்து கொண்டனர்.
கொள்ளையில் முகம் அலம்பிக்கொண்டிருந்த ரெங்க்மாவுக்கு செரோக்கி குரல் கொடுத்து அவளது பெற்றோர் வந்திருக்கும் செய்தியைத் தெரிவித்ததும், அலம்பலைப் பாதியோடு நிறுத்திக்கொண்ட அவள் தலைதெறிக்க ஒடிவந்து தனது தாய் தந்தையரை மாறி மாறி வாரியணைத்தபடி வாஞ்ஞையை வெளிப்படுத்தலானாள்.
தனது பெற்றோரின் ஜாகைப்பக்கமாக மெல்ல நகர்ந்த செரோக்கி, ரெங்க்மாவின் பெற்றோர் தாய் வீட்டு சீரோடு தன் மனை வந்துள்ள செய்தியை அவர்களிடத்தில் கூறிவிட்டுத் தன் மனைக்கு வந்தான்.
செரோக்கியின் தாயார் சம்பந்தக்குடியை உபசரிப்பதற்காக இஞ்சிச்சாயம் செய்து நச்செனச் சிறிது சீனித்துளசி இட்டு, சாயத்தைச் சுவைப்படுத்தி எடுத்து வந்தபோது, செரோக்கியின் தந்தையும் அவளைப் பின் தொடரலானார்.
நீண்டநேர குசல விசாரிப்புக்குப் பின்னர், அவர்கள் இஞ்சிச்சாயம் அருந்திவிட்டு அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டனர்.
பெற்றோர் விடை பெற்றுச் சென்றதும், தாம் நகரத்துக்குச் செல்லும் எண்ணத்தை மறந்தவளாக ரெங்க்மா தனது பெற்றோர் எடுத்து வந்தவைகளை விரித்துப் பார்க்கலானாள்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments